சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு

 

திருப்பூர், செப்.23: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில், தூய்மை இந்தியா உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் நேற்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் அமிர்தராணி கலந்து கொண்டு பேசியதாவது: நமது தாய்நாட்டை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது நமது கடமை. தூய்மையை எப்போதும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இதற்காக நேரத்தை ஒதுக்கி செயல்பட வேண்டும்.

எதையும் அசுத்தப் படுத்தக்கூடாது. பிறர் அசுத்தப்படுத்துவதையும் அனுமதிக்க கூடாது. தூய்மை இந்தியா திட்டத்தின் செய்தியை கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள மக்களுக்கு, விழிப்புணர்வு மூலம் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, செர்லின், தினேஷ்கண்ணன், சபரிவாசன், மது கார்த்திக் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள், ஒரு நபர் ஒரு ஆண்டிற்கு நூறு மணிநேரம் தூய்மை பணியில் ஈடுபட ஊக்குவிப்பேன், சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்க பாடுபடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்