சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் மனு கரையிருப்பில் இருந்து தச்சநல்லூருக்கு இணைப்புச் சாலை நெசவாளர் அணி செயலாளர் பெருமாள் வலியுறுத்தல்

நெல்லை, ஆக. 17: நெல்லை 2வது வார்டு கரையிருப்பில் இருந்து தச்சநல்லூர் பைபாஸ் சாலைக்கு இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என்று சட்டமன்றக்குழு மதிப்பீட்டுக் குழுத் தலைவர் அன்பழகன் எம்எல்ஏவிடம், மாநில திமுக நெசவாளர் அணி செயலாளர் பெருமாள் வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுத் தலைவரும், கும்பகோணம் எம்எல்ஏவுமான அன்பழகன் தலைமையிலான குழுவினர் நேற்று நெல்லை வந்தனர். குழுவின் தலைவர் அன்பழகனிடம் மாநில திமுக நெசவாளர் அணி செயலாளர் பெருமாள் அளித்த மனு: நெல்லை மாநகராட்சி 2வது வார்டுக்குட்பட்ட கரையிருப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கரையிருப்பில் நெல் விதை ஆராய்ச்சி நிலையம் சுமார் 100 ஏக்கரில் உள்ளது. இங்குள்ள அமிர்தாமயி பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அங்குள்ள சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் தினந்தோறும் பணி நிமித்தமாக மதுரை ரோட்டுக்கு வந்து தான் பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.

மதுரை ரோட்டுக்கு வரும் வழியில் ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. இது முக்கிய ரயில் வழித்தடமாக உள்ளதாலும், இரட்டை ரயில் வழித்தடமாக உள்ளதாலும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டே உள்ளது. இதனால் அந்த வழியை தினமும் பயன்படுத்துவோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இதைத் தவிர்க்க அமிர்தாமயி பள்ளி அருகில் இருந்து தச்சநல்லூர் பைபாஸ் ேராட்டுக்கு இணைப்பு சாலை அமைத்தால் கரையிருப்பு, ஆர்எஸ்ஏ நகர், குறிச்சிகுளம், சுந்தராபுரம், செட்டிகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பயன் அடைவார்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியின் போது தெரிவித்த குழு தலைவர் அன்பழகன், இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றுமாறு மாநகராட்சி கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்