சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தென்காசி எஸ்பி திடீர் ஆய்வு

சங்கரன்கோவில், ஏப்.7: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் உள்ள 4 பதற்றமான வாக்குச்சாவடிகளை தென்காசி மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, ராஜபாளையம், வில்லிப்புத்தூர், வாசுதேவநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,47,341 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1,20,299 பேர். பெண் வாக்காளர்கள் 1,27,033 பேர், மூன்றாம் பாலினத்தவர் 9 பேர் ஆவர். இந்த தொகுதியில் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 275 வாக்குச்சாவடிகளுக்கும் 330 கண்ட்ரோல் யூனிட், 330 பேலட் யூனிட், 357 இவிபேட் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டமன்ற தொகுதியில் 26 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும், 2 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் சங்கரன்கோவிலில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள அம்பேத்கர்நகர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி, காந்திநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, கழுகுமலை சாலையில் உள்ள இமாம்கசாலி பள்ளி, கக்கன்நகர் நகராட்சி நடு நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் அமையவுள்ள வாக்குச்சாவடிகளை தென்காசி மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர், இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு