காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ¾ திரளான பக்தர்கள் பங்கேற்பு ¾நாளை கருட சேவை

காஞ்சிபுரம், ஜூன் 1: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவம், வைகாசி மாதம் அஷ்ட நட்சத்திரம் பிறக்கும் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று (மே 31ம் தேதி) காலை தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு, வரதராஜ பெருமாள் மலையில் இருந்து கீழே இறங்கினார்.

பின்னர், அதிகாலை 4.15 மணிக்கு கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து 4.30 மணி அளவில் தங்க சப்பரத்தில் தேவி, பூதேவி சகிதம் சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். வைகாசி பிரமோற்சவத்தையொட்டி, வரதராஜ பெருமாள் தேவி – பூதேவியுடன் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சமேதராய் சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரியப்பிரபை, ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை, தங்கப் பல்லக்கு, யாளி வாகனம், தங்க சப்பரம், யானை வாகனம், தொட்டித் திருமஞ்சனம், குதிரை வாகனம், ஆள்மேல் பல்லக்கு உள்ளிட்ட உற்சவங்கள் சிறப்பாக நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக 3வது நாளான ஜூன் 2ம் தேதி கருட சேவை நடைபெறும். இதையொட்டி, அதிகாலை 4.30 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளுவார். அப்போது, கோபுர தரிசனமும் நடைபெறும். பின்னர், நான்கு ராஜ வீதிகள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கருட சேவை உற்சவத்தின்போது, உற்சவர் பெருமாளுக்கு முன்பாக வேத பாராயண கோஷ்டியினர் வேத பாராயணம் பாடியவாறு செல்வர்.

தேரோட்டம்: பிரமோற்சவ விழாவின் 7வது நாள் அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் எழுந்தருளுவார். பின்னர், வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து காந்தி சாலை தேரடிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு தயார் நிலையில் இருக்கும் தேரில் அதிகாலை 5.15 மணிக்கு அமர்த்தப்படுவார். இதைதொடர்ந்து, தேரின் மீது அமர்ந்திருக்கும் வரதராஜ பெருமாளை, தேரின் மீது ஏறி சென்று வழிபட அதிகாலை 5.15 முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பின்னர், 6 மணிக்கு தேர் புறப்பாடு நடைபெறும். தேரோட்டத்தை காண பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுப்பர்.

இதனால் அன்று காஞ்சிபுரம் நகரத்தின் அனைத்து சாலைகளிலும் மக்கள் வெள்ளத்தையே காணமுடியும். இத்தேர் காந்தி சாலையில் இருந்து காமராஜர் சாலை வழியாக சென்று காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 4 ராஜ வீதிகளிலும் வலம் வந்து நிலைக்கு வரும். தேரோட்டம் நடைபெறும் நாளில் பக்தர்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் சார்பில், தேரோட்டத்தை காண வரும் வெளியூர் பக்தர்களுக்கு மோர், பழரசம், வெண் பொங்கல், தயிர் சாதம், புளி சாதம் ஆகியவற்றை வழங்குவர். பிரமோற்சவத்தின் 9வது நாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். 10வது நாள் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடையும். இதற்கான விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதிதாசன், ஆய்வாளர் பிரித்திகா, நிர்வாக அலுவலர் சீனிவாசன் தலைமையில் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

Related posts

மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்

மாதவரம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்: நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை

கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை இயங்கும்