மாதவரம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்: நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூர், மே 4: மாதவரம் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். மாதவரம் மூலக்கடை அருகே சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையில், மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சுமார் 2,170 சதுர அடி இடத்தினை ஆக்கிரமித்து, தனியார் ஒருவர் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கட்டிடம் கட்டி, அதில் உணவகம் நடத்தி வந்தார். இந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தால், போக்குவரத்திற்கும், சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால், ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தனியார் நபருக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனால், அந்த நபர் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றவில்லை.

இதனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து அகற்றும்படி நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாதவரம் காவல் துறையினர் சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, ஆக்கிரமிப்பு கட்டிடத்தினை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ₹2 கோடியே 20 லட்சம் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை