களக்காடு-சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயிலில் ஆனி தேரோட்டம்

களக்காடு, ஜூலை 4: களக்காடு சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோயில் ஆனி திருவிழா தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். களக்காடு அருகே சிதம்பரபுரத்தில் உள்ள பழமைவாய்ந்த மந் நாராயணசுவாமி கோயிலில் அய்யா நாராயணசுவாமி நரசிம்ம அவதார மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் தேரோட்டத் திருவிழா 12 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்படும். அதன்படி இந்தாண்டுக்கான 94வது திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

விழாவின் 8ம் நாளன்று பரிவேட்டை விழாவும், 9ம் திருநாளன்று அய்யா நாராயணசுவாமி பச்சை சாத்தி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. 10ம் நாளன்று இரவில் பக்தர்கள் சந்தனகுடம் எடுத்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11ம் நாளான நேற்று (3ம் தேதி) கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து மாய கலியறுக்கும் பகவான் வைகுண்டர் திருத்தேருக்கு எழுந்தருளினார். இதனைதொடர்ந்து மதியம் 1.50 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் திருத்தேர் இழுத்தனர். ரதவீதிகளில் பக்தர்களுக்கு இலவச நீர், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கலாநிதி, யோகராஜன் மற்றும் தர்மகர்த்தா குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்