ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பிரதமர் மோடி

ஈரோடு, ஏப். 14: இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷ் உறுதியளித்துள்ளார்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் நேற்று மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சப்பாளி, நொச்சிபாளையம், செட்டிபாளையம், அசோக்நகர், வெள்ளாளபாளையம், 46புதூர், கருக்கம்பாளையம், லக்காபுரம், போக்குவரத்து நகர், நகராட்சி நகர், பெரியார் நகர், முத்துக்கவுண்டன்பாளையம், சின்னியம்பாளையம், சென்னப்ப நாயக்கன்பாளையம், சாவடிபாளையம், நஞ்சைஊத்துக்குளி, கோவிந்த நாயக்கன்பாளையம், குளூர், சாமிநாதபுரம், சாவடிபாளையம், பச்சாம்பாளையம், நொச்சிக்காட்டுவலசு, மணியம்பாளையம், மஞ்சக்காட்டுவலசு உள்பட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வாக்காளர்களிடம் வேட்பாளர் பிரகாஷ் பேசியதாவது:
ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்ததும் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் வசிக்கும் ஏழை பெண்கள் முழுமையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உதவித்தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளின் குறைந்தபட் ஆதார விலைக்கு அங்கீகாரம் வழங்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன், விவசாய கடன்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும். இதே போல சமையல் எரிவாயு விலை பாதியாக குறைக்கப்படும். கிராமப்புற பெண்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாகவும், அதற்கான ஊதியம் ரூ.400 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். ஈரோடு மாவட்டம் பாசூர், நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி கிராமத்தை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். ஈரோட்டில் இருந்து காங்கயம், தாராபுரம் வழியாக பழனிக்கு புதிய ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளார். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பஸ் பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம் என பல்வேறு திட்டங்களால் ஏராளமானோர் தினந்தோறும் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யுங்கள். தொகுதி மக்களாகிய உங்கள் கோரிக்கைகள் நிறைவேற நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்பதோடு புதிய திட்டங்களை தொகுதிக்கு கொண்டுவர பாடுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு