எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் 1,216 மாணவிகளுக்கு பட்டம்

 

திருப்பூர், டிச.16: திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில், 1,216 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.  திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 33வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எழிலி தலைமை வகித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது: இது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம். நீங்கள் மேலும் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும். பட்டம் பெறும் நீங்கள், பள்ளி, கல்லூரி என அடுத்தகட்டமாக சமுதாயத்தை நோக்கி அடி எடுத்து வைக்க உள்ளீர்கள்.

மாணவர் பருவம் என்பது ஒரு சிறப்பு வாய்ந்தது. அதை அடிக்கடி நினைவு கூற வேண்டும். நண்பர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு பேச வேண்டும். அப்போது, நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை உணர்வீர்கள். போட்டித் தேர்வுகளை எழுதி அரசு பணியில் சேர்ந்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மேலும், சிறந்த தொழில் முனைவோராகவும் ஆக வேண்டும். பட்டம் பெறும்போது மகிழ்ச்சி, ஆனந்த கண்ணீர் என அனைத்தும் சேர்ந்து உங்களுக்கு வரும். இதை பார்க்கும் பெற்றோர் உங்களை காட்டிலும் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். அதிலும் வீட்டில் முதல் பட்டதாரி என்றால் சொல்ல வேண்டியதில்லை.

ஆகவே, பெற்றோரை மதித்து நடக்க வேண்டும். பெற்றோரை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. அது கொலை, கொள்ளை உள்ளிட்ட 3 ஆயிரம் வகையான பாவங்கள் ஆகும். அதில், மிக முக்கியமான பாவமாக வயதான காலத்தில் பெற்றோரை உதாசீனம் செய்வதை குறிப்பிடுகிறார்கள். ஆகவே, பெற்றோரை மதித்து நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில், 2018-2021ம் ஆண்டில் தேர்ச்சிப் பெற்ற இளங்கலை பிரிவு மாணவிகள் 1,011 பேர், 2019-2021ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற முதுகலை பிரிவு மாணவிகள் 205 பேர் என மொத்தம் 1,216 மாணவிகள் பட்டம் பெற்றனர்.

மேலும் இளங்கலை பிரிவில், ஜோதிகா (இளநிலை தாவரவியல்), மோகனப்பிரியா (இளநிலை மின்னணுவியல், அனுசுயா (இளநிலை இயற்பியல் மற்றும் கணினி பயன்பாடு) ஆகியோர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றனர். பல்கலைக் கழக அளவில் தேர்ச்சி பெற்ற 27 மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்