உடலில் டீசலை ஊற்றி விவசாயி திடீர் மறியல்

 

நரசிங்கபுரம், பிப்.3: ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் மொத்த தொகை கட்டிய பின்பும் அறுவடை இயந்திரம் தராததால் உடலில் டீசல் ஊற்றி விவசாயி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகில் நெல் அறுவடை இயந்திரம் விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன், அவரது சகோதரர் மணிவேல் ஆகியோர் நெல் அறுவடை இயந்திரம் வாங்க முடிவு செய்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் அதற்கான முன் பணம் 50 ஆயிரமும், பைனான்ஸ் மூலம் ₹17 லட்சமும் செலுத்தியுள்ளனர்.

இதையடுத்து, நேற்று வங்கி கணக்கில் ₹4 லட்சம் உள்பட விலை பேசியவாறு மொத்த தொகையான ₹22 லட்சம் செலுத்திய பிறகும் அறுவடை இயந்திரத்தை வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது, மேலும் ₹75 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே வண்டி டெலிவரி செய்து தரப்படும் என ஸ்டோர் ரூம் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான லட்சுமணன், மணிவேல் தாங்கள் வந்திருந்த வாகனத்தில் வைத்திருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு சேலம் -கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், ஆத்தூர் நகர போலீசார் சம்பவ இடம் சென்று, நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதையடுத்து, இருவரும் அங்கிருந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்