இளையான்குடி பகுதியில் வெப்பத்தை தணித்த மழை

இளையான்குடி, ஜூன் 13: இளையான்குடி பகுதியில் நேற்று காலை வழக்கத்தை விட வெயில் கொளுத்தியது. கடந்த மே 4ம் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்கினி நட்சத்திரம் ஆரம்பமாகி, மே29ம் தேதி முடிவுற்றது. இளையான்குடி பகுதி உட்பட சிவகங்கை மாவட்டத்தில் வெயில் கடுமையாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், அக்கினி நட்சத்திரம் ஆரம்பமான நாள் முதல் பல்வேறு இடங்களில் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்தது.

ஆனால் அக்கினி நட்சத்திரம் முடிவுற்ற நாள் முதல் வெயில் குறையும் என எதிர்பார்த்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக வழக்கத்தை விட வெயில் கொளுத்தியது. அதனால் வழக்கத்தை விட வெப்பம் அதிகளவில் இருந்தது. காற்றில் ஈரப்பதம் இல்லாததால் சாலைகளில் அனல் பறந்தது. அதனால் டூவீலரில் செல்வோர் ஆங்காங்கே மரத்தடி நிழலில் நின்று இளைப்பாறிச் சென்றனர். வீடுகளில் மின் விசிறி காற்று அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தியதால், மரத்தடி நிழலில் உட்கார்ந்து பொழுதை கழித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென மேக கூட்டங்கள் நிறைந்து மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையில், சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் வழிந்தோடியது. கடந்த சில நாட்களாக கொளுத்திய வெயிலால், பல தரப்பட்ட மக்களும் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், வண்டல், கோட்டையூர், தாயமங்கலம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்