இலவச மரக்கன்று வழங்க ஜல்லி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு

 

பல்லடம்,மே 4: திருப்பூர் மாவட்ட கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அனுமதியுடன் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது. கல்குவாரியிலிருந்து உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசின் சாலை பணி மற்றும் திட்டப்பணிகளுக்கும், ஏழை, எளிய நடுத்தர மக்களின் கனவு இல்லம் கட்டும் பணிகளுக்கும் தேவையான ஜல்லி கற்கள், எம்.சான்ட், பி.சான்ட் உள்ளிட்டவைகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்து வருகிறோம்.

இத்தொழில் மூலம் நேரடியாக 5 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 50 ஆயிரம் குடும்பங்களும் வேலைவாய்ப்பு பெற்று பயன் அடைந்து வருகின்றனர். அரசின் விதிமுறைபடி ஏற்கனவே கல்குவாரிகளில் மரக்கன்றுகள் நட்டு பசுமை வளையமும், பாதுகாப்பு கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டரின் அறிவுரைப்படி கல்குவாரிகளில் மேலும் மரக்கன்றுகள் நடப்படும். கைவிடப்பட்ட கல்குழிகளை சுற்றி பாதுகாப்பு கம்பி வேலி அமைக்கப்படும். சுற்றுப்புற சூழல், மழை வளத்தை பெருக்க கிராமப்புறங்களில் தரிசாக இருக்கும் நிலங்களில் சங்கத்தின் சார்பில் வேப்பம், புங்கை, புளி மற்றும் பறவைகளுக்கு உணவாக கனி தரும் பழவகை மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி பசுமை வனம் ஏற்படுத்தவும் அதனை அந்தந்த ஊராட்சி மன்ற நிர்வாகங்கள் தொடர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் சங்கத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்