ஆடி அமாவாசையை முன்னிட்டு கடற்கரையில் குவிந்த மக்கள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

அறந்தாங்கி, ஆக.17: ஆடி அமாவாசையை முன்னிட்டு கட்டுமாவடி, மணமேல்குடி மீமிசல் கடற்கரையில் பக்தர்கள் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும். இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கட்டுமாவடி ராமநாத சுவாமி ஆலயத்தில் தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது. முன்னதாக சாமி ஊர்வலம் நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டது. பின்னர் கடலில் புனித நீராடி ராமநாத ராமநாத சுவாமி கோயிலில் அபிஷேக ஆராதனை செய்து முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அன்னதானமும் நடைபெற்றது. இரவில் இன்னிசை கச்சேரியும், நாடகமும் நடைபெற்றது. இதேபோன்று மணமேல்குடி அருகே உள்ள கோடியக்கரை புனித நீராட சிறந்த இடமாகும். இந்த கடற்கரையில் புனித நீராடிய பிறகு இங்குள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபடுவது வழக்கமாகும். அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று மீமிசல் கல்யாண ராமசாமி கோயிலிலும் ஆடி அமாவாசை தீர்த்த வாரி நடைபெற்றது.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்