ஆசனாம்பட்டு கிராமத்தில் தேசத்து மாரியம்மன் கோயிலில் 133ம் ஆண்டு சிரசு திருவிழா

ஒடுகத்தூர், மே 24: ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தில் தேசத்து மாரியம்மன் கோயிலில் 133ம் ஆண்டு சிரசு திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், வழிநெடுகிலும் பக்தர்கள் சார்பில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களாலான மாலை அணிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் முதல் வாரத்தில் தேசத்து மாரியம்மன் கோயில் சிரசு திருவிழா அதிவிமர்சியாக நடந்து வருவது வழக்கம். குடியாத்தம் நகரில் நடக்கும் கெங்கையம்மன் சிரசு திருவிழாவிற்கு அடுத்தபடியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் திருவிழா என தனி சிறப்பு இங்கு உள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம் அம்மனுக்கு பொங்கல் வைத்தல் மற்றும் கூழ்வார்த்தலும், அன்று இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று காலை 6 மணியளவில் மேளதாளத்துடன் அம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டது. அப்போது, பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த சிரசு அம்மனுக்கு வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் ரூபாய் நோட்டுக்களாலான மாலை அணிவித்து வழிபட்டனர். அப்போது, ஏராளமான பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும், திருமணம் வேண்டியும் தரையில் படுத்து அம்மனை மனமுருக வேண்டி கொண்டனர். தொடர்ந்து, ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களின் நேர்த்தி கடன் செலுத்தினர்.

காலை 6 மணிக்கு தொடங்கிய அம்மன் சிரசு ஊர்வலமானது மாலை 5 மணிக்கு கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு அம்மன் உடல் மீது சிரசு பொருத்தப்பட்டது. இதில், ஆசனாம்பட்டு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்