ஆக்கிரமிப்பை அகற்றி பாதை அமைக்கும் பணி தீவிரம்

 

மானாமதுரை, மார்ச் 21: மானாமதுரை அருகே ஆக்கிரமிப்பை அகற்றி பாதை அமைக்க நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு ஆவரங்காடு விவசாயிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மானாமதுரை வட்டம், வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தது. அந்த ஆக்கிரமிப்பை அகற்றி வெள்ளிக்குறிச்சி மடை குடியிருப்பு பகுதிக்கு பொதுப்பாதை அமைத்து தரக்கோரி ஆவராங்காடு ஊராட்சி மன்ற தலைவர், விவசாயி காசிமுத்து உள்ளிட்ட பொதுமக்கள் கலெக்டர் ஆஷா அஜித் இடம் மனு கொடுத்திருந்தனர். புகாரை விசாரித்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறை. மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று மானாமதுரை வட்டாட்சியர் ராஜா,மானாமதுரை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜோசப்லூயிஸ் பிரகாஷ் ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்தனர். சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி நில அளவைப் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், மானாமதுரை வட்டம், வெள்ளிக்குறிச்சி கிராமம், வெள்ளிக்குறிச்சி மடை மேலகுடியிருப்பு பகுதியில் 30 குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பு பகுதிக்கு இதுநாள் வரை பொது பாதையோ, சாலை வசதியோ ஏற்படுத்தி தரவில்லை. அதை மானாமதுரை வட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் நில அளவை செய்யப்பட்டு, பொது பாதை என 19.5.2022 அன்று குறிப்பிடப்பட்டது.

அதில் ஆக்கிரமிப்பு செய்து பாதை வழியினை தடுத்து வந்தனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தர சாலை வசதியினை ஏற்படுத்தி தர கலெக்டரிடம் மனு கொடுத்தோம். மனு மீது மானாமதுரை வட்டாட்சியர், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்க நில அளவை பணியில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டருக்கு கிராமம் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்