அரிமளம் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

 

திருமயம்,ஜூன்7: அரிமளம் அருகே மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழாநிலைகோட்டையில் இருந்து பாம்பாறு பாலம் வழியாக உசிலம்பட்டி செல்லும் முக்கிய சாலை உள்ளது. இந்த சாலை 5 ஆண்டுகளுக்கு முன் செப்பணிடப்பட்ட நிலையில் தொடர் பராமரிப்பு இல்லாததால் சாலையில் ஆங்காங்கே சிறிய அளவில் பள்ளம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சாலையில் தொடர் வாகன போக்குவரத்து காரணமாக சாலையில் தோன்றிய சிறிய பள்ளங்கள் பெரிய பள்ளங்களாக மாறியது.

இதனால் சாலையில் உள்ள ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடப்பதோடு சாலையின் நடுவே பள்ளம் பெரிய அளவில் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்க பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை காலங்களில் மழை நீர் தேங்கி குட்டை போல் மாறுவதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் சாலையில் செல்பவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த சாலையை உசிலம்பட்டி, கல்லுக்குடியிருப்பு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கீழாநிலைக்கோட்டை- உசிலம்பட்டி செல்லும் சேதம் அடைந்த சாலையை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்

வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

வ.புதுப்பட்டியில் தீ தடுப்பு சிறப்பு பயிற்சி