அரசு பள்ளியில் விலை உயர்ந்த 7 டன் மரங்கள் வெட்டி கடத்தல் பொதுமக்கள் போலீசில் புகார் ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

ஒடுகத்தூர், ஏப்.10: ஒடுகத்தூர் அருகே அரசு பள்ளியில் விலை உயர்ந்த 7 டன் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக நடவடிக்கை கோரி ஊர் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மகமதுபுரம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஆதிதிராவிடர் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் அரசு சார்பில் தேக்கு, புங்கன், வேப்பம் உள்ளிட்ட மரங்கள் நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர். இதனால், கோடை வெயிலில் மாணவர்கள் மரங்களின் நிழலில் அமர்ந்து படிக்கவோ, விளையாடவோ பயன்பட்டு வந்தது. இந்நிலையில், பள்ளி வளாகத்தில் பராமரிக்கப்பட்ட 7 டன் மரங்களை அதே பகுதியை சேர்ந்த தனிநபர் நேற்று அதிகாலையில் அனுமதியின்றி அத்துமீறி வெட்டியுள்ளார். பின்னர் டிராக்டரில் சுமார் 1.5 டன் மரங்களை கடத்தி சென்றுள்ளார். பின்னர், 2வது முறை மரங்களை ஏற்றிச் செல்லும் போது தகவலறிந்த ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் பள்ளி வளாகத்தில் திரண்டு வாகனத்தை சிறைபிடித்துள்ளனர். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த டிரைவரும் அங்கேயே வெட்டிய மரங்களை இறக்கி உள்ளார். இதுகுறித்து, ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதில் அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு