அமைச்சர் கொடுத்த ஊழல் புகார் முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் : கே.பி.சி.சி தலைவர் டி.கே சிவகுமார் பேட்டி

பெங்களூரு: ஊரக வளர்ச்சி துறையில் பல கோடி முறைகேடு நடந்திருப்பதாக அந்த துறை அமைச்சரே முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியிருப்பதால் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று கே.பி.சி.சி தலைவர் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநில பாஜ அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இருப்பவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா. இவரது துறையில் ரூ.1200 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாகவும், அதற்கு முதல்வர் எடியூரப்பா தான் காரணம் என்று கட்சி தலைமை மற்றும் மாநில ஆளுநர் வஜ்பாய் வாலாவிற்கு 3 பக்க கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் முதல்வர் எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கூறியிருந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கடிதம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் கூறும்போது;“கர்நாடக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா தனது துறையில் ரூ.1200 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இதற்கு முதல்வர் எடியூரப்பாதான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கட்சி தலைமைக்கும், ஆளுநருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதுவரை கர்நாடக மாநிலத்தில் இதுபோன்ற ஒரு செயல் நடந்தது இல்லை. மாநிலத்திலேயே முதன் முறையாக ஒரு அமைச்சர் தனது முதல்வர் மீது முறைகேடு புகார் அளித்திருப்பது. இதை கட்சி தலைமை ஏற்று நடவடிக்கை எடுப்பதுடன் மாநில முதல்வர் எடியூரப்பா, இந்த குற்றச்சாட்டிற்கு தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இல்லையென்றால் புகார் அளித்த அமைச்சரை ராஜினாமா செய்ய வையுங்கள்.அமைச்சரே முதல்வர் மீது புகார் அளிக்கும் வகையில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இருப்பினும் முதல்வர் மீதான குற்றச்சாட்டிற்கு, அவரது ராஜினாமாதான் முடிவு. அதே நேரம் ஆபாச சி.டி வழக்கிற்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் தலைவர் என்ற முறையில் ரமேஷ் ஜார்கிஹோளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினேன். அதனால் என்னுடைய பெயரை இந்த வழக்கில் சேர்த்துவிட்டனர். எனது பெயர் அவர்களுக்கு மார்கெட்டிங்காகவுள்ளது. பயன்படுத்தி கொள்ளட்டும். அதை நான் கண்டு கொள்வது இல்லை. கேட்டு கொள்வது இல்லை’’ என்றார்….

Related posts

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் : நீதிமன்றம் அனுமதி

பிரதமர் பதவிக்கு எனது விருப்பம் ராகுல் காந்தி: கார்கே பரபரப்பு பேட்டி

உச்ச நீதிமன்ற கொலிஜியம் விவரங்களை கேட்ட மனுதாரருக்கு ரூ.25000 அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி