விதவிதமான பிரசாதங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பெருமாள் கோயில் புளியோதரையும், அனுமார் கோயில் மிளகு வடையும் சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது. கோயிலில் கொடுப்பதே தனிசுவைதான். பூரி ஜெகன்னாதர் கோயிலை, அன்னஷேத்திரம் என்று சொல்வார்கள். நாட்டின் மிகப் பெரிய அன்னதானக்கூடம், அங்குதான் உள்ளது. எந்த நேரம் போனாலும் சாப்பாடு உண்டு என்பது அங்கு சென்று வந்தால் தெரியும். அந்த கோயிலில் வழங்கும் காஜா இனிப்பின் தித்திப்பு, நம் நாக்கைவிட்டுப் போகவே நாலு நாட்கள் ஆகும்.

* கடலை மாவு, நெய், சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி பருப்பு எல்லாம் போட்டு, லட்டு செய்தால், அதில் வரும் சுவையே தனிதான். அப்படிப்பட்ட லட்டு, திருப்பதியில் மட்டுமே. அதன் சுவையும் மணமும் அந்த குபேரனையே கடனாளியாக்கிவிடும்.

* வெண்ணெய் திருடி தின்ன கிருஷ்ணன், கதைகளை நாம் கேட்டிருப்போம். அதையே பிரசாதமாக கொடுப்பதை பார்த்திருக்கிறீர்களா? பிருந்தாவனத்திலும், துவாரகையிலும் உள்ள கிருஷ்ணர் கோயில்களில், காலை பூஜையின்போது, கடைந்து எடுத்த வெண்ணையை பிரசாதமாக தருவார்கள்.

* எப்போதாவது ஜம்மு போக நேர்ந்தால், அங்குள்ள வைஷ்ணவி தேவி கோயில் போக மறக்காதீர்கள். அங்கே முர்முரா (சாத உருண்டை) இலைச்சிடானா அல்லது சர்க்கரை உருண்டைகள், சில உலர்ந்த பழங்கள் மற்றும் வெயிலில் உலர்த்திய ஆப்பிளை பிரசாதமாக கொடுப்பார்கள். மாதா வைஷ்ணவி தேவியின் தனித்துவமான பிரசாதமாகும்.

* காசியில் புகழ்பெற்ற அனுமான் கோயில் உள்ளது. துளசிதாசர் என்பவர் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. இங்கே அவர் அனுமானை பார்த்ததாக கதைகள் உண்டு. இங்கே, இரண்டு வகையான லட்டுகள் வழங்கப்படுகிறது. ஒன்று கடலை மாவுடன் செய்த லட்டு. மற்றொன்று, பாலை சுண்ட வைத்து செய்யப்படும் லால்பேடா. லால்பேடா, நாவில் பட்டதும் கரைந்துவிட்டதோ, என்று நினைக்க தோன்றும்.

* திண்டுக்கல் தாடிக்கொம்பு சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் இருக்கும் தன்வந்திரி பகவான் சந்நதியில், லேகியம் மற்றும் தைலம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. உடல்நல பாதிப்புகள் உள்ளவர்கள், இந்த மருந்தை சாப்பிட்டால், உடல் பிணி நீங்கும்.

* கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தேப்பெருமாநல்லூர் என்ற திருத்தலம். இங்கு வேதாந்த நாயகி உடனாய விஸ்வநாதர் கோயில் இருக்கிறது. இவ்வாலய இறைவனுக்கு ருத்ராட்சத்தினால் அர்ச்சனை செய்யப்படுகிறது இத்தலம் வரும் பக்தர்களுக்கு சுவாமிக்கு அர்ச்சனை செய்த ருத்ராட்சதையே பிரசாதமாக வழங்குகிறார்கள்..

* ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மறவர் கரிசல்குளம் கிராமம் உள்ளது. இங்கு ராஜராஜேஸ்வரி உடன் ஆகி விஸ்வநாதர் கோயில் உள்ளது. தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து இறைவனை வணங்குவதோடு, வில்வ இலையையும் வில்வக்காயையும் பிரசாதமாக எடுத்துக்கொண்டால், நோய் தீரும் என்பது நம்பிக்கை.

* கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ளது மண்டைக்காடு என்ற ஊர். அங்கு, பகவதி அம்மன் கோயில் கொண்டுள்ளாள். இந்த ஆலயத்தை பெண்களின் சபரிமலை என்று அழைப்பார்கள். இங்கு, பெண்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து வழிபாடு செய்வார்கள். இந்த ஆலயத்தில், அம்மனுக்கு பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து `மண்டையப்பம்’ என்னும் பிரசாதம் செய்து படைக்கிறார்கள். இதனை சாப்பிட்டால் தீராத தலைவலியும் நீங்கிவிடும்.

* கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை ஆலயத்தில், தினமும் இரவு பூஜையின் போது, பக்தர்களுக்கு வழங்கப்படும் கசாயத் தீர்த்த பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், வெல்லம் ஆகியவைகளை சேர்த்து தயாரிக்கப்படும் மருத்துவ குணங்கள் கொண்டது இந்த பிரசாதம்.

* குற்றாலத்தில் குற்றாலநாதருக்கும் அம்மனுக்கும் நாள்தோறும் சுக்கு காப்பியை நைவேத்தியம் செய்கிறார்கள். சுக்கு, மிளகு போட்டு கசாயம் வைத்து இருவருக்கும் படைக்கிறார்கள். கோயிலுக்கு பின்னால், இரவு பகல் எந்நேரமும் குற்றால அருவி கொட்டிக் கொண்டே இருக்கிறது. அது அப்பன் – அம்மை இருவர் தலையிலும் விழுவதாக ஐதீகம். இப்படி எந்நேரமும் தலையில் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருப்பதால் இருவருக்கும் சளி காய்ச்சல் என்று வந்துவிடக் கூடாது அல்லவா அதற்காகத்தான் சுக்கு காப்பி.

* தஞ்சாவூரில் உள்ள பங்காரு காமாட்சி அம்மனுக்கு, காணும் பொங்கல் மற்றும் உடைக்காத முழு தேங்காயை நிவேதனம் செய்து வழிபடுகிறார்கள்.

* பூரி ஜெகநாதருக்கு நாள்தோறும் 56 வகையான பிரசாதங்கள் நைவேத்தியம் செய்யப் படுகின்றன. காலை 11:00 மணி முதல் ஒரு மணி வரையில் பல பானைகளில் சாதம், காய்கறி, குழம்பு, கூட்டு முதலியவற்றை நிவேதனம் செய்கிறார்கள்.

* கோரைக் கிழங்கை பக்குவமாக சமைத்து, பகவானுக்கு படைக்கும் ஒரே வைணவ தலம் ஸ்ரீமுஷ்ணம் ஆகும்.

* கும்பகோணத்திற்கு அருகில் உள்ள மிகச்சிறந்த வைணவ திருத்தலமான ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் பெருமாளுக்கு உப்பில்லாத பிரசாதம் படைக்கப்படுகிறது.

* காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் குடலை இட்லி எனப்படும் புதுமையான இட்லி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* விஜயவாடாவிற்கு அருகில் உள்ளது பானக நரசிம்மர் கோயில். இக்கோயிலில், எழுந்தருளியுள்ள இறைவனுக்கு அடிக்கடி பானகம் நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது.

* ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளுக்கு தேங்காயை உடைத்து நெய்வேத்தியம் செய்வதில்லை. தேங்காயை துருவி, அந்த துருவலைத்தான் படைக்கிறார்கள். தேங்காயை உடைத்தால் அந்த சத்தம், பள்ளி கொண்டிருக்கும் இறைவனை எழுப்பிவிடும் என்கின்ற காரணத்தால்.

* கேரளாவில் உள்ள கூடல் மாணிக்க சேத்திரம் என்ற ஊரில், இறைவனுக்கு நைவேத்தியமாகவும், பிரசாதமாகவும் அளிக்கப்படுவது எது தெரியுமா? கத்தரிக்காய் தான்.

தொகுப்பு: ஆர்.ஜெயலட்சுமி

Related posts

எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!

குருவும் திருவும்

திருவைகுந்த விண்ணகரம் வைகுந்தநாதப் பெருமாள்