சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா சனாதனம் என்பது மரபு சார்ந்த பாரம்பரிய வழி: ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு

காஞ்சிபுரம்: சனாதனம் என்பது மரபு சார்ந்த பாரம்பரிய வழி, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன் என்று வள்ளலார் சொல்வதும் சனாதனம் தான் என தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பட்டமளிப்பு விழாவில் கூறினர்.
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராம.வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை நவீன உயர் ஆராய்ச்சி கூடத்தை திறந்து வைத்து 296 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி பேசியதாவது: சனாதனம் என்பது மரபு சார்ந்த பாரம்பரிய வழி, அது அனைத்து உயிர்களுக்கும் சமமாக விளங்குகிறது. அது ஒரு குடும்பம், தன்னைப் போலவே அனைவரையும் சமமாக நினைப்பது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன் என்று வள்ளலார் சொல்வதும் சனாதனம் தான். பாரதம் என்பது விஸ்வ குருவாக உள்ளது. வானையும், கடலையும் அளக்கும் அளவிற்கு தொழில்நுட்பத் துறையில் இந்தியா சிறந்த விளங்குவது பற்றியும், பொருளாதார முன்னேற்ற தொழில் துறை வளர்ச்சியில், நம் பாரத நாடு மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது. இவ்விழாவில் கல்லூரி தலைவர் வி.பி.குமாரகிருஷ்ணன், செயலாளர் வி.பி.ரிஷிகேசன், சென்னை வைஷ்ணவா கல்லூரி முன்னாள் முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் தமிழக ஆளுநர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது