பொன்னேரி முதல் திருவொற்றியூர் வரை நெடுஞ்சாலை தடுப்புச் சுவரின் இருபக்கமும் மணல் குவியல்கள்: வாகன ஓட்டிகள் அவதி

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சாலையில் தடுப்புச் சுவரின் இருபக்கமும் மணல் குவிந்துள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது மணல் துகள்கள் காற்றில் பறந்து, வாகன ஓட்டிகளில் கண்களில் பட்டு, அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மணலி புதுநகர், பழைய நாப்பாளையம், புதிய நாப்பாளையம், வெள்ளி வாயல் சாவடி, கொண்டக்கரை, பட்டமந்திரி, மேலூர், வல்லூர், புங்கம்பேடு, பிடிஓ ஆபிஸ், வேளச்சேரி செல்லும் 400 அடிசாலை, மீஞ்சூர் பஜார், நாலூர், மேட்டுப்பாளையம், இலவம்பேடு, புளிக்குளம், தடப்பெரும்பாக்கம் பொன்னேரி வரை சுமார் 20 கிலோ மீட்டருக்கும் தூரம் சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவரின் இரு பக்கமும் மணல் குவியல்கள் உள்ளன.

இதனால் லாரி, பஸ், கனரக வாகனங்கள் செல்லும்போது அந்த வேகத்தில் தேங்கி இருக்கிற மணல்கள் காற்றில் பறந்து இருசக்கர வாகன ஓட்டிகள் கண்ணில் பட்டு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பலர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மெத்தனப் போக்கே அடிக்கடி விபத்து காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மணல் குவியல்களை அகற்றி வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு வழிவகை செய்திட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

‘போலீஸ் ஸ்டிக்கர்’ ஒட்டிய போலீஸ் வாகனங்களுக்கும் ரூ.500 அபராதம் விதிப்பு: வேப்பேரி போக்குவரத்து போலீஸ் அதிரடி