பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தற்காலிக நிழற்குடை

சென்னை: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. அருகில், பெருங்களத்தூர் ரயில்வே கேட் அமைந்துள்ளதாலும், போக்குவரத்து மிகுதி காரணமாகவும் இந்த பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ₹234 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி, வண்டலூரில் இருந்து தாம்பரம் மார்க்கத்தில் முடிக்கப்பட்ட ஒருபகுதி மேம்பாலம் மட்டும் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. தற்போது தாம்பரத்தில் இருந்து வண்டலூர் செல்லும் மார்க்கத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணிகள் காரணமாக அங்கிருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் பஸ்சுக்காக சாலையில் காத்திருப்பதுடன், சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த மேம்பால பணிகள் முடிய இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால், பேருந்து நிறுத்தம் அருகே தற்காலிக நிழற்குடை, மின்விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்து தர வேண்டும், என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 5ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில், பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில், பயணிகள் வசதிக்காக, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தற்காலிக நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related posts

தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

ராயனூர் அருகே பாசன வாய்க்காலில் கழிவு அகற்ற வேண்டும்

குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள்: குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு