குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

பூந்தமல்லி: ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் உள்ள பிரசித்தி பெற்ற ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 1ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 2ம் நாள் யாகசாலை பூஜையில் திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, எந்திர பூஜைகள் நடைபெற்றன.

3ம் நாள் பூஜையில் லட்சுமி சஹஸ்ரநாம பாராயணம், மந்திர வேள்வி பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும், 4ம் நாள் சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, கணபதி பூஜை என 4 கால பூஜைகளும் நடைபெற்றன. அதை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில், பூந்தமல்லி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து எல்லையம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை எல்லையம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தாவும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான பூவை எம்.ஞானம், நிர்மலா ஞானம் குடும்பத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்