நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை

திருமண பொருத்தம் என்பது வண்டியின் சக்கரம் போல கணவன் மனைவி சிக்கலைப் பற்றிச் கவியரசு கண்ணதாசன் ஒரு பாடலிலே எழுதி இருப்பார்.

“வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் – அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?’’

கணவன் மனைவி என்பது, அதாவது ஒன்றாம் இடமும், ஏழாம் இடமும் எவ்வளவு துல்லியமான பொருத்தமாக இருப்பது என்பதை வால்மீகி ராமாயணத்தில் காட்டுகின்றார். கிஷ்கிந்தா காண்டத்திலே ராமனைச் சந்தித்து, அவருடைய தோற்றப் பொலிவையும், பண்புகளையும் அறிந்த அனுமன், சுந்தரகாண்டத்தில் இலங்கைக்குச் சென்று, சீதையை அசோகவனத்தில் சந்திக்கின்றான். அவன் ராமனைப் பார்த்தது ஒன்றாமிடம். சீதையைப் பார்ப்பது ஏழாம் இடம்.

இப்பொழுது வால்மீகி ஒரு ஸ்லோகம் போடுகின்றார். ராமனுக்கேத்த சீதை, அழகாலும், பண்பாலும், வயதாலும், உயரத்தினாலும், ஞானத்தினாலும், எல்லாவற்றினாலும் மிகமிகப் பொருத்தமாக இருந்தாள். ஒரு குன்றுமணி எடைகூட கூடுதல் குறைவின்றி இருந்ததாள்.

“துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லஷணாம் –
ராகவ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸி தேஷணா

“துல்யம்” என்கிற வார்த்தை இந்த ஸ்லோகத்திலே வால்மீகி பயன்படுத்துகின்றார். அப்படியானால், திருமணப் பொருத்தத்தில் முதலில் இந்த விஷயங்களைத் தான் பார்க்க வேண்டும். ஆனால், நாம் இப்பொழுது வேறு சில விஷயங்களைப் பார்ப்பதால், ஜாதக பொருத்தம் வேறுவிதமாக இருக்கிறது. சமமான நட்பு உடையவர்கள், ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொள்பவர்கள், எதிரெதிர் துருவங்களாக இருப்பதால், ஒருவரை ஒருவர் ஆகர்ஷணம் செய்து, இந்த உலகத்துக்குத் தேவையான நன்மையைச் செய்பவர்கள். காந்தத்தில் இரு துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொண்டுதான் இருக்கும். அதைப் போல, கணவன் மனைவி ஒருவரை ஒருவர் ஆகர்ஷணம் செய்து வாழ்வதால், அந்த வாழ்க்கை நிலையாக இருக்கும். அதனால்தான் ஏழாம் இடத்தை மிக முக்கியமாக கவனித்தார்கள்.

ஆனால், ஏழாம் இடத்தில் கணவன் அல்லது மனைவி சம்பந்தமான செய்திகள் மட்டுமா இருக்கின்றன. அதில் வேறு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஒருவருடைய தொழிலைப் பற்றியும், ஒருவன் சந்திக்கக் கூடிய மனிதர்களைப் பற்றியும் பல விஷயங்கள் இருக்கின்றன. விஷயங்களைப் பாவகாரகங்கள், கிரககாரகங்கள் அடிப்படையில் பிரித்து எடுப்பதற்கு நுட்பமான சாஸ்திர அறிவு வேண்டும்.

இரண்டாவதாக, அந்த ஏழாம் இடத்தை மட்டும் பார்த்தால் போதாது. லக்கினத்திற்கும் அந்த ஏழாம் இடத்திற்கும் உள்ள உறவைப் பார்க்க வேண்டும். இரண்டாம் இடம் என்பது குடும்பஸ்தானம் என்று சொல்லுகிறார்கள். அதனுடைய வலிமையைப் பார்க்க வேண்டும். சிலருக்கு திருமணம் ஆகியிருக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்காது. பேருக்குத்தான் திருமணம். அப்படி வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இதற்குதான் இரண்டாம் இடத்திற்கும் ஏழாம் இடத்திற்கும் உள்ள அமைப்பை ஆராய வேண்டும். இரண்டாம் இடம் குடும்பஸ்தானம் மட்டும் கிடையாது. அது வருகின்ற ஒரு புதிய நபரைப் பற்றியது.

ஒருவருடைய பணம் வருவாய் சம்பந்தப்பட்ட செய்திகளை சொல்லக் கூடியது. (தனஸ்தானம்) ஒருவர் பேசுகின்ற பேச்சை சொல்ல கூடியது. (வாக்குஸ்தானம்) ஒருவருடைய ஆரம்ப கல்வி நிலையைச் சொல்லக் கூடியது. ஒருவருடைய கண்ணை பற்றியும் உடல் நிலையைப்பற்றியும் (நேத்ர ஸ்தானம்) சொல்லக்கூடியது. மனைவி அல்லது கணவனின் ஆயுளையும் குறிக்கக்கூடியது. (7-ஆம் இடத்திற்கு 8-ஆம் இடம்) இப்படி பல விஷயங்கள் அதில் இருக்கின்றன.

அதேபோல, நான்காம் இடம். அது சுகங்களைக் குறிப்பது மட்டுமல்ல, தாயாரையும் குறிப்பது. ஏழாம் இடத்திற்கும் நான்காம் இடத்திற்கும் பொருத்தம் இல்லை என்று சொன்னால் இவர்கள் நன்றாக இருந்தாலும்கூட, வீட்டில் மாமியாருக்கு மருமகளுக்கும் உறவுச் சிக்கல் இருக்கும். இப்படி எல்லாவற்றையும் பார்த்து நாம் ஒரு ஜாதகத்தை இணைப்பது என்பது எளிமையான செயலா? இதில், இதற்குதான் முக்கியத்துவம் தரவேண்டும்; அதற்கு தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏதாவது ஒரு சின்ன விஷயம் தடம் புரண்டாலும்கூட மொத்த வாழ்க்கையும் தடம் புரள்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

அடுத்தபடியாக உங்கள் ஜாதகத்தில் பெரும்பாலும் நீங்கள் விரும்புகின்ற மனைவியை அல்லது விரும்புகின்ற கணவனை அல்லது பெற்றோர்கள் விரும்புகின்ற ஒரு கணவனையோ மனைவியோ தேடுவதாகவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால், ஜாதகத்திற்குரிய கணவன் அல்லது மனைவி யார் என்பது ஜாதகத்திலேயே இருக்கும். ஆனால், அது அப்படித்தான் அமையும் என்று சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தாங்கள் விரும்புகின்ற ஒரு விஷயத்தை வெளியில்தான் தேட வேண்டுமே தவிர, ஜாதகத்தில் தேடுவதில் பயன் இல்லை. சில வருடங்களுக்கு முன் ஒரு ஜோதிடர், ஒரு நண்பருக்கு திருமண விஷயங்களைப் பற்றிச் சொன்னார்.

‘‘இவருக்கு 32 முடிந்து 33 ஆரம்பிக்கும் போதுதான் திருமணம் நடக்கும். காதல் திருமணம்தான். பெண்ணுக்கு வடக்கு பார்த்த வீடு. ஒரு சகோதரர் உண்டு. அம்மா அப்பா இல்லை. அரசாங்க வேலையில் இருப்பார். பெரிதாக நிறம் இருக்காது. கால் சற்று ஊனமாக இருக்கும்’’இப்படிச் சொல்லியவுடன் ஜாதகம் கொண்டு சென்றவர்கள் வெறுத்துவிட்டார்கள். அவர்களுக்கு பயங்கரமான கோபம். அவர்கள் நல்ல சிவப்பான, அந்தஸ்து உள்ள பெண்ணினுடைய புகைப்படங்களை, தங்களுக்கு வந்த ஜாதகங்களில் வடிகட்டி எடுத்துச் சென்று, இதில் எது பொருத்தமோ அதை முடித்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.

ஜோதிடர் இப்படிச் சொன்னதும் அவர்கள் திரும்பி வந்து விட்டார்கள். வேறு ஒரு ஜோதிடரிடம் காட்டிய போது ‘‘ஆண் அஸ்வின் நட்சத்திரம். மேஷராசி. பெண் உத்திரம் 1-ஆம் பாதம். சிம்ம ராசி. பொருத்தம் கன ஜோர். இந்த ராசிக்கு அந்த ராசி ஒன்பதாம் ராசி. யார் பொருத்தம் இல்லை என்று சொன்னது?’’ என்று சொல்லிவிட்டார். திருமண ஏற்பாடுகள் நடந்தன. நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. ஆனால், திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும்போது, பெண் தனக்குப் பிடித்த பையனை, வேறு ஊரில் மணமுடித்துக் கொண்டதாகச் செய்திவந்தது. திருமணம் நின்றுவிட்டது.

இங்கே தசவிதப் பொருத்தம் காலை வாரிவிட்டது. பிறகு நிறைய ஜாதகம் வந்து தள்ளித் தள்ளிப் போய் கடைசியில் தனது அலுவலகத்தில் வேலை பார்த்த, நிறம் குறைந்த, கால் சற்று விந்தி விந்தி நடக்கும், ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பையனுக்கு ஏழில் சனி இருப்பதும், சனி திசை நடப்பதும், ஏழாம் இடம், நான்காம் இடம், ரெண்டாம் இடத்தோடு நல்ல பிணைப்போடு இருப்பதும், ஐந்தாம் இடம் வேலை செய்து கொண்டிருப்பதையும் இரண்டாம் ஜோதிடர் கவனிக்காமல் இருந்திருக்கலாம். எப்படி இருந்தாலும், இது ஒரு அனுமானம்தான். பல நேரங்களில் கிரகங்கள் நேர்வழியில் செல்வதாக பாவலா காட்டிவிட்டு, குறுக்கு வழிக்கு சென்றுவிடும். எவ்வளவு முயன்றாலும் கிரகங்களின் செயல்களை இப்படித்தான் நடக்கும் என்று அடித்து நிர்ணயிக்க முடியாது.

80 சதவீதம் சரியாக இருக்கலாம். சிலருக்கு 90 சதவீதம்கூட சரியாக இருக்கலாம். ஆனால், இந்த 10 சதவீதம் போதுமே தோல்விக்கு. ஒரு சின்ன ஓட்டை தானே கப்பலை கவிழ்த்து விடுகிறது. இங்கேயும் கண்ணதாசன்தான் கை கொடுக்கிறார்.

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும், பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்!’’

தொகுப்பு: தேஜஸ்வி

Related posts

துலாம் ராசியினரின் இருக்கு – இல்லை முரண்பாடுகள்

சகுன மற்றும் நிமித்த சாஸ்திரம்

என் ஜாதகம் சரியில்லை, என்ன செய்வது?