விருதுநகரில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்ற சென்னை பள்ளி மாணவி மதுரையில் மர்ம மரணம்: பயிற்சியாளர் தோளில் மயங்கிச் சாய்ந்தார்

சென்னை: விருதுநகரில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்னையில் இருந்து வந்த மாணவி, மதுரை ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் அபிநந்தனா (15). அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இவர், பள்ளி கூடைபந்து அணி சார்பில் பல்வேறு இடங்களுக்குச் சென்று விளையாடி வருவார். இந்நிலையில், விருதுநகரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மாணவி அபிநந்தனா, பள்ளி விளையாட்டு அணியினர் மற்றும் பயிற்சியாளர்களுடன் வந்திருந்தார். விளையாட்டுப் போட்டிகள் முடிந்ததும் அனைவரும் நேற்று சென்னைக்கு புறப்பட்டனர்.

விருதுநகரில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையம் வந்து சென்னை ரயிலை பிடிப்பதற்காக, மதுரை ரயில் நிலையத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, மாணவி அபிநந்தனா திடீரென பெண் பயிற்சியாளர் மீது மயங்கி சாய்ந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் மாணவியை பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து திலகர் திடல் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தரப்பட்டுள்ளது. போலீசார் முதல் கட்டமாக சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த சென்னை மாணவி, மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மதுரை ரயில் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு

மாணவர் சேர்க்கைக்கு 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்