காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் கனரக வாகனங்கள்: தேர்வு நேரத்தில் மாணவர்கள் பாதிப்பு; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வாலாஜாபாத்: காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வரை செல்லும் சாலையில் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் கனரக வாகனங்களால் தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொது தேர்வு நேற்று (26ம் தேதி) முதல் தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் என இரு கல்வி மாவட்டங்களில் 8140 மாணவர்களும், 7813 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை தேர்வு துறையினர் செய்துள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வரை செல்லும் சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையையொட்டி அய்யம்பேட்டை, ஏக்கனாம்பேட்டை, வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலைப்பள்ளிகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இந்த சாலை வழியாக செல்லும் கனரக லாரிகள் மட்டுமின்றி, தனியார் பேருந்துகள் அதிக சத்தத்தை எழுப்பும் ஒலிப்பான்களை வைத்து செல்கின்றன.

சாலை விரிவாக்கத்தின்போது பள்ளி உள்ள பகுதி ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என பதாகைகள் இருந்ததை அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி இருப்பதை தெரியாமல் இந்த வழியாக செல்லும் லாரிகள், தனியார் பேருந்துகள் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்புவதால் தேர்வு வளாகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கடும் சிரமப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுபோன்றநிலையில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அதிக சத்தம் எழுப்பும் லாரிகள், பேருந்துகள் மீது வழக்குப்பதிவு செய்து, அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை