அரசு மகளிர் பள்ளியில் மரங்கள் வெட்டி சாய்ப்பு

 

தர்மபுரி, ஜூலை 25: இலக்கியம்பட்டி அரசு மகளிர் பள்ளியில், அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, எம்எல்ஏ மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக இசைஅமுது உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் வேம்பு, பாதாம், புங்கன், தேக்கு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. கடந்த 21ம் தேதி, பள்ளி வளாகத்திற்குள் இருந்த 10க்கும் மேற்பட்ட மரங்களை பள்ளி நிர்வாகம் வெட்டியது. இதையறிந்த அப்பகுதி மக்கள், மரங்கள் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் மரங்கள் வெட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவரும், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏவுமான கோவிந்தசாமி, நேற்று பள்ளிக்கு நேரில் சென்று வெட்டப்பட்ட மரங்களை பார்வையிட்டார். மேலும், தர்மபுரி தாசில்தார் ஜெயசெல்வன், பள்ளி கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர் ரவிசந்திரன் ஆகியோர், நேரில் சென்று ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகளிடம் எம்எல்ஏ கோவிந்தசாமி கூறுகையில், ‘இந்த பள்ளி வளாகத்தில் நானே பல மரக்கன்றுகளை நட்டுள்ளேன். இந்த மரங்களை அனுமதியின்றி வெட்டியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என கல்வித்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு பள்ளியில் மரம் வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்