எழும்பூரில் அமைந்துள்ள காவல் அருங்காட்சியகத்தில் 9ம் தேதி உணவு திருவிழா: பொதுமக்களுக்கு அனுமதி

சென்னை: எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தில் வரும் 9ம் தேதி உணவு திருவிழாவுக்கு சென்னை மாநகர காவல்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக அலுவலகம், தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 24 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 2 தளங்களாக உள்ள இக்கட்டிடத்தின் தரைதளத்தில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், சீருடைகள், வாத்திய இசைக் கருவிகள், காவல் துறையின் சாதனைகள், மீட்டெடுக்கப்பட்ட சிலைகள், கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள், குண்டுகளை கண்டெடுக்க உதவும் கருவிகள், மாதிரி சிறைச்சாலை ஆகியவையும், முதல் தளத்தில் பல்வேறு வகையான துப்பாக்கிகள், வாள் மற்றும் தோட்டாக்களும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், காவல் துறையில் சிறப்பாக பணி செய்தவர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்கள், முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல் துறை தொடர்பாக அக்காலத்தில் இயற்றப்பட்ட அதிமுக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயர் காலத்து காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழக காவல் துறையின் தொடக்க கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய் படைகளின் புகைப்படங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தித் தொகுப்புகள், காவல் ஆணையர் அலுவலக அறையில் இருந்த பழமையான பொருட்கள், அணிவகுப்பு சின்னங்கள், கம்பியில்லா தொலைதொடர்பு கருவிகள், காவல் துறை சேவை பதக்கங்கள், கலைப்பொருட்கள் ஆகியவையும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த காவல் அருங்காட்சியகத்தில் வரும் 9ம் தேதி உணவு திருவிழாவுக்கு சென்னை மாநகர காவல்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எழும்பூரில் இயங்கி வரும் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் வரும் 9ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு உணவு திருவிழா நடைபெற உள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, தலைமையிட இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி மேற்பார்வையில் இந்த உணவு திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவுக்கு புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர் தாமு சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளார். இந்த உணவு திருவிழாவில் நமது பாரம்பரியம் மற்றும் உணவு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பெங்காலி மற்றும் வடமாநில உணவு வகைகளும் இடம் பெற உள்ளது. அருங்காட்சியகத்தை கண்டுகளிக்கவும், உணவு திருவிழாவில் உண்டு மகிழவும் அனைத்து பொதுமக்களுக்கும் அனுமதி உண்டு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு

மாணவர் சேர்க்கைக்கு 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்