ஆந்திரா செல்லும் பஸ்கள் ஜூன் 4ம் தேதி முதல் மாதவரம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்: செயலாளர் பனீந்திரரெட்டி உத்தரவு

சென்னை: ஆந்திரா செல்லும் பேருந்துகள் வரும் 4ம் தேதி முதல் மாதவரம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும், என்று போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், சென்னையிலிருந்து வடக்கு நோக்கி ஆந்திரா, திருப்பதி மற்றும் காளஹஸ்தி செல்லும் பேருந்துகளுக்கான தனிப் பேருந்து நிலையம் கடந்த 2018ம் ஆண்டு மாதவரத்தில் ரூ.94.16 கோடியில் நிறுவப்பட்டது. இங்கு, ஆந்திர மாநில போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு தங்கும் அறை போதுமானதாக இல்லாததால் கூடுதல் இடம் கொடுக்கவும், பயணிகள் தங்கும் கூடங்களை 2, 4, 6 பேர் தங்கும் அறைகளாக மாற்றியமைக்கவும், பயணிகள் காத்திருக்கும் அறைகளில் இருக்கை வசதி மற்றும் தொலைக்காட்சி வசதி அமைத்துக் கொடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், மாநகர பேருந்து நிறுத்தம் உள்ள இடத்தில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி அமைக்கவும், பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டுக்கு எல்இடி அறிவிப்பு பலகையும், நுழைவு வாயிலில் வளைவு அமைக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி, நேற்று மாதவரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். அப்போது, விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில், திருவள்ளூர் மண்டலத்தின் கீழ் உள்ள பணிமனைகளிலிருந்து இயக்கப்படும் ஆந்திரா மாநிலத்தை நோக்கி செல்லும் பேருந்துகள், கோயம்பேடு காய்கனி அங்காடி நிலையத்திற்கு வந்து செல்லும் போது, மாதவரம் பேருந்து நிலையத்திற்குள்ளே செல்லாமல் மாதவரம் ரவுண்டானா நிறுத்தத்திலேயே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதை கண்டறிந்தார்.

இதையடுத்து பொது மக்கள் வசதிக்கேற்ப வரும் ஜூன் 4ம் தேதிமுதல் 90A (சுண்ணாம்புகுளம் – கோயம்பேடு), 90A/A (அண்ணாமலைசேரி – கோயம்பேடு), 113A/A (தேர்வாய் – கோயம்பேடு), 90B (கல்லூர் – கோயம்பேடு), 101A/A (பிளேஸ்பாளையம் – கோயம்பேடு), 112A/A (சத்தியவேடு – கோயம்பேடு), 125A (புத்தூர்- கோயம்பேடு), 131A/A (மாதர்பாக்கம் – கோயம்பேடு), 79I (மையூர் – கோயம்பேடு), 79V (முக்கரம்பாக்கம் – கோயம்பேடு) தடப் பேருந்துகள் கோயம்பேடு காய்கனி அங்காடி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் போது, மாதவரம் பேருந்து நிலையத்திற்கு வெளியே ரவுண்டானா நிறுதத்தில் நிறுத்தாமல், மாதவரம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல உத்திரவிட்டார்.

Related posts

உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்

திருச்சுழி-உடையானம்பட்டி இடையே குண்டாறு குறுக்கே உயர்மட்ட பாலம்: கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

பெண் அடித்து கொலை? கண்மாயில் உடல் மீட்பு