4 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து ஏமாற்றிவிட்டனர் எஸ்பி அலுவலகத்தில் நடிகை கவுதமி பரபரப்பு புகார் ரியல் எஸ்டேட் ஏஜென்ட், அவரது மனைவியிடம் விசாரணை திருவண்ணாமலை அருகே பல கோடி மதிப்புள்ள

திருவண்ணாமலை, செப். 13: திருவண்ணாமலை அருகே ₹48 லட்சம் மதிப்பிலான விவசாய நிலத்தை மோசடியாக ஏமாற்றியதாக நடிகை கவுதமி கொடுத்த புகாரின் பேரில், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கவுதமி. குருசிஷ்யன் படத்தில் அறிமுகமாகி, இறுதியாக பாபநாசம் படம் வரை ஏராளமான படங்களில் நடித்தவர். அவர், கடந்த 2004ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எனவே, அவரது சொத்துக்களுக்கு பவர் ஏஜென்டாக இருந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட் அழகப்பன் என்பவரை நியமித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்பத்தூர் அருகே ₹25 கோடி மதிப்பிலான சொத்துக்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு மோசடி செய்து, ஏமாற்றிவிட்டதாக நடிகை கவுதமி நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். எனவே, இழந்த சொத்துக்களையும், பணத்தையும் மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருவண்ணாமலை பகுதியில், கடந்த 2019ம் ஆண்டு ₹48 லட்சத்துக்கு வாங்கப்பட்டு, தற்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சாள் ஆகியோர் மோசடியாக ஏமாற்றியிருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நடிகை கவுதமி அவரது வக்கீல்கள் மூலம் புகார் அளித்துள்ளார்.

நடிகை கவுதமி அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர் அழகப்பன். அவரது மனைவி நாச்சாள். இவர்கள், தற்போது சென்னை வேளச்சேரி பகுதியில் வசிக்கின்றனர். சினிமா பைனான்சியராக அழகப்பன் இருந்ததால், அவரது அறிமுகம் கிடைத்தது. மேலும், அவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2004ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். எனவே, என்னுடைய மகளின் எதிர்காலத்துக்காக நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவரிடம் கொடுத்து சொத்துக்கள் வாங்க சொன்னேன். நான் நேரில் செல்ல முடியாது என்பதால், எனது சொத்துக்களுக்கு அழகப்பனை அதிகாரப்பூர்வ பவர் ஏஜென்டராக நியமித்தேன்.

ஆனால், என் பெயரில் வாங்கிய சொத்துக்களை எனக்கே தெரியாமல் விற்பனை செய்து முறைகேடாக ஏமாற்றியிருக்கிறார். இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த ஐங்குணம் கிராமத்தில் 4 ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த 2019ம் ஆண்டு ₹48 லட்சத்துக்கு வாங்கினேன். தற்போது, அதன் சந்தை மதிப்பு பல கோடி என தெரிகிறது. ஆனால், அந்த நிலத்தை என்னுடைய பெயரிலும், அவரது மனைவி நாச்சாள் பெயரிலும் சேர்த்து பதிவு செய்திருப்பது சமீபத்தில் தெரியவந்தது. இது குறித்து கேட்டபோது, உரிய பதில் அளிக்காமல், சொத்துக்களுக்கான ஆவணங்களையும் அளிக்காமல் ஏமாற்றுகிறார். எனவே, ஐயங்குணம் கிராமத்தில் நான் வாங்கிய 4 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தர வேண்டும். என் பெயரில் வாங்குவாதாக தெரிவித்துவிட்டு, மோசடியாக அவரது மனைவி பெயரிலும் பதிவு செய்திருப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவருக்கு அளித்திருந்த பவரையும் சமீபத்தில் ரத்து செய்துவிட்டேன். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் நேற்று அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சாள் ஆகியோரிடம் டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் விசாரணை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் விசாரணை நீடித்தது. அப்போது, ஐங்குணம் கிராமத்தில் கவுதமி பெயரில் வாங்கப்பட் 4 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், பவர் ஏஜென்டாக இருந்த காலத்தில் எந்தெந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது, அவை முறையாக நடிகை கவுதமியிடம் ஒப்படைக்கப்பட்டதா எனவும் விசாரித்தனர். விசாரணை நடந்த மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில், வெளி ஆட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு