250 ஆண்டுகள் பழமையான ஹூமாயூன் மஹாலில் விரைவில் அருங்காட்சியகம் திறக்க ஏற்பாடு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் 250 ஆண்டுகள் பழமையான ஹூமாயூன் மஹாலில் விரைவில் அருங்காட்சியகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் 250 ஆண்டுகள் பழமையான ஹூமாயூன் மஹால் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் வேளாண்மை துறை, கைவிரல் ரேகை பிரிவு, அச்சக பிரிவு என பல அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. இந்த கட்டிடம், கடந்த 2005ம் ஆண்டு  வலுவிழந்ததால் அங்கிருந்த அரசு அலுவலகங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு இந்த  கட்டிடத்தின் கீழ்தளத்தில் தீவிபத்து ஏற்பட்டு முற்றிலும் எரிந்தது. இதையடுத்து, தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்து புனரமைப்பு செய்யும் பொருட்டு,  கண்காணிப்பு பொறியாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் பொறியாளர்கள் குழுவினர் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்பேரில், பழமை மாறாமல் ஹூமாயூன் மஹாலை மறுசீரமைக்க தமிழக அரசு ரூ.41.12 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த பணி 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது.   தற்போது இங்கு கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. தொடர்ந்து  மின் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இக்கட்டிடத்தின் பழமையை பேணிகாக்கும் வகையில் அருங்காட்சியமாக மாற்றப்படுகிறது. அதில், ஒரு பகுதியில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. மற்றொரு பகுதியில் வேளாண்மை துறை சார்பில் அருங்காட்சியகம் வைக்கப்படுகிறது. இதில், தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை சார்பில் தானியங்கள், அரிய வகை மலர்களால் அருங்காட்சியம் போன்று அமைக்கப்படுகிறது. பார்ர்வையாளர்களைக் கவரும் வகையில் பாரம்பரியம் தொடர்பான படங்கள் மற்றும் எழுத்துக்கள் கொண்ட அருங்காட்சியகம் ஒன்றை மஹாலின் உள்ளே அமைக்கத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கான மதிப்பீடு ரூ.7 கோடி ஆகும். விரைவில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

Related posts

மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த தெருவிளக்குகளால் இருளில் மூழ்கும் சாலைகள்: சீரமைக்க கோரிக்கை

வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடையில் திருடிய பெண் கைது

பணம் திருடியவர்களை பிடிக்க முயன்றதால் நடைபாதையில் தூங்கிய வாலிபர் மீது ஆசிட் வீச்சு: தப்பிய 4 பேருக்கு வலை