ஊட்டி, மே 15: ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்திய ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், ஸ்பூன், ஸ்ட்ரா, முலாம் பூசப்பட்ட காகித தட்டுககள், பிளாஸ்டிக் வாழைஇலை வடிவ தாள், பிளாஸ்டிக் தொரணங்கள், கொடிகள் போன்ற உள்ளிட்ட 19 வகையான பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது.

இதுதவிர ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர நீலகிரியில் பிளாஸ்டிக் தடை இருப்பது தெரியாமல் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஒரு லிட்டர் பாட்டில்களை கொண்டு வந்து விடுகின்றனர். அவர்களுக்கும் அவ்வப்போது அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் நிலையில், ஊட்டி நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகமாக உள்ளதாகவும், ஆய்வுகள் நடத்தி அபராதம் விதிக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் ஊட்டியில் குதிரை பந்தயம் நடைபெற்று வரும் நிலையில் ஊட்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இப்புகாரின் பேரில் ஊட்டி நகராட்சி நகர்நல அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் ரேஸ் கிளப் அலுவலக கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது 50 மிலி., 100 மிலி., அளவு கொண்ட ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பேப்பர் கப்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது