₹3,000 லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக முன்னாள் பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை: திருவள்ளூர் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர், ஆக. 25: ₹3 ஆயிரம் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக முன்னாள் பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருவள்ளூர் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, சின்னகாவனம் கிராம நிர்வாக அலுவலகராக வி.மல்லிகா என்பவர் கடந்த 10.03.1984 முதல் 16.12.2010 வரை பணிபுரிந்துள்ளார். இவரை சொசைட்டி ஆப் சேவா மிஷனரிஸ், மணலி நியூ டவுன் என்ற தொண்டு நிறுவனத்திற்கு பள்ளி கட்டிடம் கட்ட வாங்கப்பட்ட நிலத்திற்கு சிட்டா, அடங்கல் மற்றும் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதற்கு டி.ஸ்ரீதர் என்பவர் 15.12.2010 அன்று அணுகியுள்ளார். அப்போது. அதற்கு மல்லிகா ₹3,000 லஞ்சம் கொடுத்தால்தான் அனைத்தையும் வழங்குவேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

தருக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவில் அவர் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, சிறப்பு புலனாய்வுக்குழுவினர் கடந்த 16.12.2010 அன்று வழக்குப்பதிவு செய்து, சான்றளிக்கப்பட்ட சிட்டா, அடங்கல் மற்றும் பட்டா பெயர் மாற்றம் வழங்குவதற்கு ₹3,000 லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக மல்லிகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை நீதிமன்றம், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 13.08.2012 அன்று குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மல்லிகாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ₹20,000 அபராதமும், அபாராதம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்