வேறு ஒரு பெண்ணுடன் காவலர் தகாத உறவுதட்டிக்கேட்ட மைத்துனருக்கு வெட்டு

சங்கராபுரம், ஏப். 10: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் யுவராஜ்(32). இவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றினார். தற்பொழுது ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் யுவராஜ் அவரது மனைவி கல்கி(22) ஆகியோருக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த யுவராஜ் வீச்சரிவாளால் கல்கியை வெட்ட முயன்றுள்ளார். அப்போது, அங்கு வந்த கல்கியின் சகோதரர் சர்மா ஏன் என் தங்கையை வெட்ட வருகிறாய் என கேட்டு, தடுக்க முயன்றுள்ளார்.

இதில், சர்மாவிற்கு தலையில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து யுவராஜ் மனைவி கல்கி சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கூறியிருப்பதாவது, சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் யுவராஜ். அவரின் எதிர் வீட்டில் வசித்து வந்தபோது, எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. கடந்த ஆறு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக எனது கணவர் வேறு ஒரு பெண்ணிடம் தகாத தொடர்பு வைத்துக்கொண்டு, என்னை துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அங்கு எங்கள் இருவரையும் அழைத்து சமரசம் செய்து வைத்து அனுப்பினார்கள். அன்று மறுநாளில், இருந்து எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப சண்டை வந்து கொண்டே இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நான், என் குழந்தைகளுடன் எனது தாய் வீட்டிற்கு சென்று விட்டேன். நேற்று மதியம் என் தாய் வீட்டிற்கு வந்த எனது கணவர் யுவராஜ் உன்னை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு நீ விவாகரத்து கொடுக்க வேண்டும், இல்லையென்றால் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என கூறி, வீச்சரிவாளால் வெட்ட முயன்றார். அதனை என் அண்ணன் சர்மா தடுக்க முயன்றார். தடுக்க முயன்ற சர்மா தலையில் வெட்டுப்பட்டது. எனவே எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மூரார்பாளையம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட சர்மாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி, சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர்கள் நரசிம்ம ஜோதி, ஜெயமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் சங்கராபுரம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யுவராஜ் கடந்த 2013ம் ஆண்டு காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். அவருடைய தந்தை ராமச்சந்திரன் என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்