வேன் உரிமையாளர், டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வடலூர், ஏப். 29: மந்தாரக்குப்பம் அருகே குறவன்குப்பம் கிராமம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் ராஜ்குமார்(34). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் வடக்கு வெள்ளூர் கிராமம் மெயின் ரோடை சேர்ந்த ஜெயராமன் மகன் ரமேஷ்(42), டிரைவராக உள்ளார். இவர்கள் இருவரும் கோயில் திருவிழாக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் ரமேஷை வடக்கு வெள்ளூரில் உள்ள அவரது வீட்டில் விட சென்றுள்ளார். வேன் டிரைவர் ரமேஷ் வீட்டின் அருகே இருவரும் நின்று பேசிக்கொண்டிருதனர். அப்போது அதே வடக்கு வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த, கணேசன் மகன் கட்ட ராஜா என்கின்ற ராஜேந்திரன்(45) தனது பைக்கில் வந்து, சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்த ராஜ்குமார் மற்றும் ரமேசிடம் நீங்கள் யார், எதற்காக இங்கே நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அப்போது ரமேஷ், நானும் இந்த ஊரு தான் அண்ணா, அதுதான் எனது வீடு என கூறியுள்ளார். அதற்கு கட்ட ராஜா என்ற ராஜேந்திரன் இந்த இடத்தில் எல்லாம் நிற்கக்கூடாது கிளம்புங்கள் எனக்கூறி இருவரையும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ராஜேந்திரனை இருவரும் சேர்ந்து தாக்கினர். தகவலறிந்த அவரது நண்பர்கள் ரமேஷ் மற்றும் ராஜ்குமாரை உருட்டு கட்டையால், கொடூரமாக தாக்கி, மறைத்து வைத்திருந்த அறிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடினர். இதனைத் தொடர்ந்து இருவரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே விழுந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் நெய்வேலி மந்தாரக்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீசார் கட்ட ராஜா என்ற ராஜேந்திரன், வடக்கு வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த மணிக்கண்ணன் மகன்கள் அருள் கண்ணன்(25), அஜித் கண்ணன்(26), உக்கரவேல் மகன் பிரவீன்(28) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கட்ட ராஜா என்கின்ற ராஜேந்திரன், அருள் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ரமேஷ் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க செயினையும் பறித்துள்ளனர். கட்ட ராஜா என்ற ராஜேந்திரன், அஜித் கண்ணன் மீது பல்வேறு வழக்குகள், கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்