வாழை நாரில் கூடுதல் வருமானம்: மதிப்பு கூட்டப்பட்ட நார் பொருட்கள் கிலோ ரூ.70

வாழை நாரிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட கலைப் பொருட்களை தயாரித்து விற்பதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் மகளிர் திட்ட பெண்கள் வேலை வாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டி வருவதோடு வாழை விவசாயிகளுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. வாழை மரத்திலுள்ள இலை, பூ, காய், பழம், தண்டு என அனைத்து பகுதிகளையும் விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. மேலும் வாழைத் தண்டின் காய்ந்த பகுதியிலிருந்து கிடைக்கும் நாரினை பூமாலைகள் கட்டுவதற்கு பயன்படுத்திவரும் நிலையில், தற்போது அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு விதமான கலைப் பொருட்கள் தயாரிக்கப்படுவதால் வாழை நாருக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லை வாழை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.இதுகுறித்து களக்காடு பகுதியைச் சேர்ந்த வாழை விவசாயி திருப்பதிராஜா கூறுகையில், “களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் நேந்திரன் வாழை அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் வாழைக்காய்கள் பெரும்பாலும் பக்கத்து மாநிலமான கேரளாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாழைக்காய்களுக்கு சீசனை பொறுத்து கிலோ ஒன்றுக்கு குறைந்தது ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை எங்களுக்கு கிடைக்கும். களக்காடு வடகரை பகுதியில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் 3 ஆயிரம் நேந்திரன் வாழைகளை நட்டுள்ளேன். உரம், பூச்சி மருந்து, களை அறுவடை செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகள் போக ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் ஒன்றரை லட்சம் வரை வருமானம் கிடைக்கின்றது.நேந்திரன் வாழையின் இலைகள் மற்றும் நடுப்பகுதி தண்டு நாட்டு வாழைகளைப் போல் சாப்பிட பயன்படுவதில்லை. இதன் நடுப்பகுதி தவிர்த்து சுற்றியுள்ள தார் பகுதி நாருக்காகவே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. வாழைநார் எடுக்கும் வியாபாரிகள் ஒரு வாழை மரத்திற்கு ரூ.3 கொடுத்து எங்களிடம் இருந்து வாங்கிச் செல்கின்றனர். அவர்கள் வாழைநாரை உரித்தெடுத்து பூமாலை கட்டுபவர்களுக்கும், அதிலிருந்து கலைப் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கும் கொடுக்கின்றனர். வாழைநாரில் கலைப்பொருட்கள் தயாரித்து மதிப்பு கூட்டி விற்பதால் வாழைநாருக்கு தற்போது கூடுதல் மதிப்பு ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் அதிக தொகை கொடுத்து வாழை நாரை வாங்குவார்கள் என்று எதிர் பார்க்கின்றேன். இதனால் என்னைப் போன்ற வாழை விவசாயிகளுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கிறது” என்றார்.நெல்லை மாவட்டத்தில் கோடகநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நடுக்கல்லூர் மற்றும் சுத்தமல்லி பகுதியிலுள்ள பெரியார்நகர் ஆகிய இடங்களில் வாழைநாரிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட கலைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வாழை மரத்தின் நார், தண்டு பகுதி வீணாவதில்லை.  அதை காயவைத்து, விற்பதன் மூலம் அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. வாழைநாரில் மதிப்பு கூட்டப்பட்ட கலைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவரும் நடுக்கல்லூரிலுள்ள பனானா பைபர் புராடக்ட்ஸ் புரடியூசர் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் திருமதி மதிவாணி அவர்களால் இந்நிறுவனம் உருவானது. அதில் பல்வேறு விதமான கலைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து நம்மிடம் பகிந்து கொண்டார்.“நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் முழு முயற்சி மற்றும் மகளிர் திட்ட நிர்வாகிகள் மூலம் கிராமப்புறத்தை நகர்ப்புறமாக்குதல் என்னும் ரூர்பன் (RURBAN) திட்டத்தின் கீழ் நடுக்கல்லூர், சுத்தமல்லி பகுதிகளில் வாழைநாரில் மதிப்பு கூட்டப்பட்ட கலைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் 2021 ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படுத்தப்பட்டது. இப்பகுதிகளிலுள்ள பீடி சுற்றும் பெண்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் விதமாகவும், அவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாகவும் இந்நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டது. மகளிர் திட்டத்தில் உள்ள பல்வேறு சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இந்நிறுவனங்களுக்கான கட்டிடவசதி, வாழைநார், எந்திரங்கள், கூடைகள் செய்வதற்கான மோல்டுகள் உள்ளிட்ட அலுவலக பொருட்கள் அனைத்தும் வாங்குவதற்கான நிதியுதவி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டது. இதன் மூலம் மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை இப்பெண்கள் வருமானம் ஈட்டுகின்றனர். எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்ட அட்டை, இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலம் வழங்கப்படும் e-SHRAM அட்டை, வருமானம், இருப்பிடம் மற்றும் சாதிச் சான்றிதழ்கள் போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உதவியோடு வாங்கிக் கொடுத்துள்ளோம். எங்களுக்கு தேவையான வாழைநார்களை களக்காடு, சேரன்மகாதேவி, வள்ளியூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த வாழைநார் வியாபாரிகளிடம் இருந்து, ஒரு கிலோ ரூ.70 கொடுத்து வாங்குகிறோம். எங்களின் தேவைக்கேற்ப வாழைநாரை அவ்வப்போது வாங்கி சேமித்து வைத்துக் கொள்வோம். கடந்த 11 மாதங்களில் எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த பெண்கள் மூலம் வாழைநாரில் கூடை, விளக்குக் கூடை பொருட்களை 2 லட்சம் எண்ணிக்கையில் தயார் செய்து, ரூ.80 லட்சம் வரை விற்பனை செய்துள்ளோம். இதில் எங்களுக்கு உற்பத்திச் செலவு, சம்பளம், நிர்வாகச் செலவுகள் போக 20 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது.நாங்கள் வாழைநாரை தண்ணீரில் நனைத்து, அதை கூரிய எந்திரம் மூலம் சிறிது சிறிதாக பிரித்தெடுத்து, அதில் பொருட்கள் செய்வதற்கான மோல்டுகள் மூலம் தேவையான அளவுகளில் கூடைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான அலங்கார பொருட்களை செய்கிறோம். இப்பொருட்கள் பூஞ்சைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அதன்மீது ஒருவித பசையை பூசி, அதை மேலும் வலுப்பெறச் செய்கிறோம். பின்னர் அதன் தரத்தை பரிசோதித்த பிறகு விற்பனை செய்கிறோம். இந்த வாழைநார் கூடைகள் வீடு மற்றும் ஹோட்டல் போன்ற பகுதிகளில் பொருட்கள் வைப்பதற்கும், மின்விளக்குகள் பொருத்தும் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தலாம். சிறிய அளவிலான வாழைநார் கூடைகளை ஒன்று ரூ.40 வீதம் எங்களிடம்  வாங்கிச் சென்று அதில் பூக்கள் வைத்து பேக் செய்து அதன் மதிப்பை மேலும் கூடுதலாக்கி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.வாழைநார் மூலம் தயாரிக்கப்படும் கலைப் பொருட்களுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்தால் எங்களைப் போன்ற மகளிர் திட்டப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வருமானம் கிடைப்பதோடு, வாழை விவசாயிகளுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று மதிவாணி தெரிவித்தார்.விவசாயி: திருப்பதி ராஜா- 95009 28698.தொடர்புக்கு: மதிவாணி-88705 65252, ராஜா-96886 29435.தொகுப்பு: க.கதிரவன்  படங்கள்: ரவிச்சந்திரன்

Related posts

இந்திய விவசாயமும் காலநிலை மாற்றமும்

மருதாணி… மருதாணி…

வருமானம் தரும் வான்கோழி!