வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த 2 பேர் கைது

 

கிணத்துக்கடவு, செப்.27: வடசித்தூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலையை அவமதித்த 2 பேரை நெகமம் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் சமத்துவபுரம் பகுதியில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலைக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாள் மற்றும் மறைவு நாளையொட்டி பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 20ம் தேதி காலை பெரியார் சிலை மீது சில சமூக விரோதிகள் மாட்டு சாணம் அடித்துள்ளனர். இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி விசிக, திராவிடர் கழகம், தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிந்த நெகமம் போலீசார் தனிப்படை அமைத்து சமூக விரோதிகளை தேடி வந்தனர். சமத்துவபுரம் பகுதில் 20ம் தேதி இரவு காலை நேரங்களில் நடமாடிய நபர்களின் செல்போன் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

வடசித்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று போலீசார் ரோந்து பணியின்போது வடசித்தூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜா (25), கோகுல் (24) என்பதும், பெரியார் சிலை மீது சாணியை ஊற்றி அவமதிப்பு செய்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை