லும்பினியில் பிரதமர் மோடி பேச்சு நேபாளத்துடனான உறவு வலுவானது

லும்பினி: ‘இந்தியா, நேபாளம் இடையேயான உறவு இமயமலைப் போல அசைக்க முடியாத வலுவானது’ என லும்பினியில் பிரதமர் மோடி பேசினார். நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தியூபாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி புத்த பூர்ணிமாவையொட்டி ஒரு நாள் அரசுமுறை பயணமாக நேபாளம் சென்றார். புத்தரின் பிறப்பு, ஞானோதயம், இறப்பு ஆகிய மூன்றும் மே மாதம் பவுர்ணமி நாளில் புத்த பூர்ணிமாவாக பவுத்தர்களால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நேபாளத்தில் புத்தர் பிறந்த லும்பினி சென்றடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தியூபா வரவேற்றார். பின்னர், லும்பினியில் உள்ள புத்தர் பிறந்த புனித தலமான மாயாதேவி கோயிலுக்கு நேபாள பிரதமர் தியூபாவுடன் சென்று பிரதமர் மோடி வழிபட்டார். அங்கு பவுத்த முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு அருகே உள்ள புத்த துறவிகள் மடத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு சர்வதேச புத்த கலாசார பாரம்பரிய மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். இந்த மையம் டெல்லியில் உள்ள சர்வதேச புத்த கூட்டமைப்பின் முயற்சியால் கட்டப்பட உள்ளது. இதில் எரிசக்தி, நீர், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட நவீன வசதிகளுடன், பிரார்த்தனை அரங்குகள், தியான மையங்கள், நூலகம், பொருட்காட்சி, தேநீர் நிலையம், அலுவலகங்கள் மற்றும் இதர வசதிகள் இடம்பெற உள்ளதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் ஷெர்பகதூர் தியூபாவும் நீர்மின்சாரம், தகவல் தொடர்பு உள்பட பல்வேறு துறைகளில் பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். இதில், இருநாடுகள் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சர்வதேச புத்த கலாசார பாரம்பரிய மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ந்து வரும் உலக சூழலில், இந்தியா-நேபாளத்தின் வலுவான நட்புறவினால், நெருக்கத்தினால் மனித குலம் முழுவதும் பயனடையும். இரு நாடுகளின் உறவு இமயமலையைப் போன்று அசைக்க முடியாதது. உலகில் நிலவும் பிரச்சனைகளுக்கு இரு நாடுகளும் இணைந்து புத்தரின் சிந்தனை வழிகாட்டுதலுடன் தீர்வு காணும். புத்தர் மனித சமூகத்தின் ஒட்டுமொத்த புரிதலின் பண்புருவானவர். புத்தர் பிறந்த இடத்தின் சக்தி எனக்கு வித்தியாசமான உணர்வை அளிக்கிறது. இந்த தலத்திற்கு 2014ம் ஆண்டில் பரிசாக அளித்த மகாபோதி மரக்கன்று தற்போது மரமாக வளர்ந்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் உள்ள சாரநாத், புத்த கயா, குஷிநகரில் இருந்து நேபாளத்தின் லும்பினியில் உள்ள இந்த புனித தலம் வரை அனைத்தும் நமது பாரம்பரியம் மற்றும் பகிர்ந்து கொண்ட மதிப்பீடுகளின் அடையாளமாகும். இவற்றை நாம் மேலும் வளப்படுத்தவும் மேம்படுத்தவும் வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 2014ம் ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் மோடி மேற்கொள்ளும் ஐந்தாவது நேபாள பயணம் இதுவாகும்.6 ஒப்பந்தங்கள் கையெழுத்துஇந்தியா-நேபாளம் இடையே கையெழுத்தான கலாசாரம், கல்வி தொடர்பான 6 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:* இந்திய கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளை, லும்பினி புத்த பல்கலைக்கழகம் இடையே பவுத்த ஆய்வுகளுக்கான டாக்டர் அம்பேத்கர் இருக்கை அமைத்தல்* இந்திய கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளை, திரிபுவன் பல்கலைக்கழகம் இடையே இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கை அமைத்தல்* இந்திய கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளை, காத்மண்டு பல்கலைக்கழகம் இடையே இந்திய ஆய்வுக்கான ஐசிசிஆர் இருக்கை அமைத்தல்* சென்னை ஐஐடி. காத்மண்டு பல்கலைக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்* சென்னை ஐஐடி. காத்மண்டு பல்கலைக் கழகம் இடையே முதுநிலை பட்டப் படிப்பில் கூட்டு சான்றிதழ் வழங்கும் ஒப்பந்த கடித ம்* எஸ்ஜேவிஎன் நிறுவனம், நேபாள மின்சார ஆணையம் இடையே அருண்-4 திட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் அமல்படுத்துதல் தொடர்பான ஒப்பந்தம்…

Related posts

அரசியல் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு இம்ரான் தடையாக உள்ளார்: மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு

பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசரம் போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

வட கொரியாவுக்கு எதிராக எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம்: மீண்டும் தொடங்குவதாக தென் கொரியா அறிவிப்பு