லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவு மாநகராட்சியில் துவக்கப்படுமா?

 

மதுரை, ஏப்.17: மதுரை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவு துவக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்காக வாரம்தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட கிழக்கு, வடக்கு, மத்தியம், தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகிறது.

இது தவிர வாட்ஸ்அப், முகநூல் மூலம் பொதுமக்கள் மனுக்களை அளித்து குறைகளை தீர்த்துக் கொள்ள வசதி உள்ளது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மீது லஞ்சப்புகார் அளிக்க லஞ்சப்புலனாய்வு பிரிவு மாநகராட்சியில் இருந்தது. இந்த லஞ்சப்புலனாய்வுப்பிரிவில் இளநிலை உதவியாளர் ஒருவர் புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்டிருப்பார். இவரை மாநகராட்சியே நியமித்துக்கொள்ளும். மாநகராட்சி ஊழியர்கள் யாரும் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தால் அந்த மனுவை கமிஷனர் வசம் தான் அந்த ஊழியர் ஒப்படைப்பார்.

மாநகராட்சி கமிஷனருக்கு பல வேலைகள் இருப்பதால் இதனை அவரால் தீவிரமாக கண்காணிக்க முடியாது. இதற்கு அதிகாரம் இல்லாததால் லஞ்சப் புலனாய்வுப் பிரிவை நீக்கி விட்டனர். இதனால் மதுரை மாநகராட்சியில் லஞ்சப்புகாரை தெரிவிக்க வழியில்லாமல் போய் விடுகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின்வாரியம் ஆகிய துறைகளில் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை நேரடியாக இயங்கி வருகிறது. அதுபோல மதுரை மாநகராட்சியிலும் தமிழ்நாடு காவல்துறையின் கீழ் இயங்கும் லஞ்சஒழிப்புப் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு