ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சிவகாசி தாலுகா அலுவலக சாலை விரிவாக்கம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

 

சிவகாசி, ஆக. 13: சிவகாசி தாலுகா அலுவலகத்திற்கு செல்லும் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் சுமார் 400 மீட்டரில் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிவகாசி மின்வாரிய அலுவலகம், ஆணையூர் ஊராட்சி மன்ற அலுவலகம், ஆனையூர் கிராம விஏஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், இரண்டு பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ளன. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக காணப்படும். சாலை எப்பொழுதும் மிகவும் பரபரப்பாகவே காணப்படும். குறிப்பாக அரசு வேலை நாட்களில் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான டூவீலர்கள் கனரக வாகனங்கள் சென்று வரும்.

இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக காணப்பட்டது. சாலை விரிவாக்கப்படாததால் கனரக வாகனங்கள், டூவீலரில் செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துலட்சுமிவிவேகன்ராஜ் ஆலோசனையின் பேரில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.2 லட்சம், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாராயணன் ஏற்பாட்டின் பேரில் ஆணையூர் ஊராட்சி 15வது நிதி குழு மானியம் நிதி ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலையின் இரு புறமும் பேவர் பிளாக் கல் பதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட காலமாக மிகவும் குண்டும் குழியுமாக கடந்த இந்த சாலைக்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி