முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

மதுராந்தகம், மே 26: மதுராந்தகம் அருகே குடிநீர் கேட்டு, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டநிலையில், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மதுராந்தகம் அடுத்துள்ள அரையப்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இக்கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை.

இதையடுத்து, அரையப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை ஒன்றாக திரண்டு மேலவலம்பேட்டை – திருக்கழுக்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக, அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related posts

பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர் 80.8% தேர்ச்சி: 7 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தல்

ஈஞ்சம்பாக்கத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற ₹3 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், காவலர் கைது

மின்தடையை கண்டித்து சாலை மறியல்