முட்டுக்காடு படகுகுழாமில் நவீன வசதிகளுடன் விளையாட்டு திடல்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருப்போரூர், ஜூலை 30: தனியார் நிறுவனம் சார்பில் முட்டுக்காடு முட்டுக்காடு படகுகுழாமில் நவீன வசதிகளுடன் கழிப்பறை, விளையாட்டு திடல் ஆகியவற்றை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். சென்னையை அடுத்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான படகுகுழாம் உள்ளது. இந்த படகுகுழாமில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ், நவீன கழிப்பறை, குழந்தைகள் விளையாட்டு திடல், தண்ணீர் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம், கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம், காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில், ராயல் என்பீல்டு நிறுவன நிர்வாக அறங்காவலர் சங்கர நாராயணன் வரவேற்றார். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் விக்யாத் சிங் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தார். விழாவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ராயல் என்பீல்டு நிறுவன பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறை, குழந்தைகள் விளையாட்டு திடல் ஆகியவற்றை திறந்துவைத்து, தண்ணீர் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம், கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம், காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாட்டையும் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை பொது மேலாளர் பாரதிதேவி, செங்கல்பட்டு சார் கலெக்டர் லட்சுமிபதி, முட்டுக்காடு படகுகுழாம் உதவி மேலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது