முகவரி கேட்பதுபோல் நடித்து ஆட்டோவில் வந்து செல்போன் பறிப்பு: வாலிபர் கைது

 

அம்பத்தூர்: அரும்பாக்கத்தில் முகவரி கேட்பது போல் நடித்து, ஆட்டோவில் வந்து செல்போன் பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அரும்பாக்கம் பட்டேல் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(48). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 22ம் தேதி அரும்பாக்கம் விநாயகபுரம் தெருவில் சவாரிக்காக ஆட்டோவில் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த இருவர், ஒரு முகவரியை கொடுத்து, இங்கு எங்கு இருக்கிறது, என கேட்டுள்ளனர்.

அவர், அந்த முகவரியை பார்த்தபோது, திடீரென்று நாகராஜ் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஆட்டோவில் இருவரும் தப்பிச் சென்றனர். அந்த ஆட்டோவை நாகராஜ் வெகுதூரமாக விரட்டிச் சென்றார். ஆனால் அவர்களை அவரால் பிடிக்க முடியவில்லை. அதற்குள் அந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்து நாகராஜ் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து அரும்பாக்கம் காவல் நிலைய உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது ஆட்டோவின் எண்களை வைத்து விசாரணை செய்ததில், அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(26) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மணிகண்டன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து நாகராஜின் செல்போனை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மணிகண்டனிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி