மாத்திரை தின்று மாணவி மயங்கி விழுந்த விவகாரம் தேசிய குழந்தைகள், பெண்கள் நலவாரியம் பள்ளியில் விசாரணை

புழல், மே 4: புழல் அடுத்த புத்தகரம் சிங்கார வேலன் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கொளத்தூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். முழு ஆண்டு தேர்வு முடிவு விடுமுறை நேரத்தில், பள்ளி மாணவி சக தோழிகளுடன் பார்ட்டி கொண்டாட முடிவு எடுத்து பள்ளி ஆசிரியரிடம் அனுமதிகேட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து பள்ளியின் மற்ற ஆசிரியர்கள், தலைமை ஆசிரியை ஆகியோர் பார்ட்டி கொண்டாடக்கூடாது என மறுப்பு தெரிவித்து, அந்த மாணவியை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீடு திரும்பியதும் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு மயக்கம் அடைந்தார். பெற்றோர் அவரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

புகாரின் பேரில் ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தேசிய குழந்தைகள் மற்றும் பெண்கள் நல வாரியத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேசிய குழந்தைகள் மற்றும் பெண்கள் நல வாரிய உறுப்பினர் ஆனந்தகுமார் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு நேற்று நேரில் சென்றார். தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் தாளாளர், நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினார். முழு தகவல்களும் தேசிய குழந்தைகள் மற்றும் பெண்கள் நல வாரிய தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் பெற்றுள்ளனர். குழந்தையின் எதிர்கால நலன் கருதி இந்த விவகாரத்தை பெரிதாக விரும்பவில்லை. அதனால் காவல்நிலையத்தில் அளித்த புகார் கொளத்தூர் துணை ஆணையர் முன் வாபஸ் பெறப்பட்டதாக தெரிவித்தனர்’ என்றனர். விசாரணையின்போது போலீஸ் உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலர் சென்றனர்.

Related posts

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தேசிய விழிப்புணர்வு கருத்தரங்கு

புதியம்புத்தூர் அருகே யூனியன் பள்ளியில் கோள்கள் திருவிழா

திருச்செந்தூரில் நடந்த ஜமாபந்தியில் உடன்குடியில் அடிப்படை வசதி நிறைவேற்ற வலியுறுத்தி மனு