மாணவி மதி மரண வழக்கில் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை விழுப்புரம் கோர்ட்டில் சிபிசிஐடி தாக்கல்

விழுப்புரம், மே 16: கனியாமூர் தனியார்பள்ளி மாணவி மதி மரண வழக்கில் சிபிசிஐடி போலீசார் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மதி கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி பள்ளி வளாகத்தில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம், கலவரமாக மாறியதால், தனியார் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது. வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.

இது தொடர்பாக தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று குற்றப்பத்திரிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையையும், விடுதி வளாகத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகள், மாணவி இறப்பு தொடர்பான ஆய்வக அறிக்கைகள் உள்ளிட்ட 100 ஆவணங்களையும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே மாணவி கொலைக்கான முகாந்திரம் இல்லையென்றும், தற்கொலைக்கான முகாந்திரம் இருப்பதாகவும், அதேசமயம் பள்ளி நிர்வாகம் விடுதியை முறையாக பராமரிக்கவில்லை என்றும் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விரைவில் வழக்கை விசாரிக்கும் என்று தெரிகிறது.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்