மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பூஜை

 

குன்றத்தூர், பிப்.12: மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று அரசு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பூஜை நடைபெற்றது. தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு தொடங்க உள்ளநிலையில், தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதி, தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் ஸ்ரீவித்யா சரஸ்வதி யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஸ்ரீவித்யா சரஸ்வதி யாகம் நடத்தப்பட்டது. இதில், அம்மன் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பேனா, பென்சில், ரப்பர் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட் ஆகியவற்றை வைத்து சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.

இதில், மாங்காடு, குன்றத்துார் மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியாக யாகம் முடிவடைந்த நிலையில், அம்மன் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனா, பென்சில், ரப்பர்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்