மளிகை கடையின் ஷட்டரை உடைத்து திருட்டு காசுகளை சிதறவிட்டு சென்ற கொள்ளையர்கள்: பூதப்பாண்டி அருகே பரபரப்பு

 

பூதப்பாண்டி, மே 26: மளிகை கடையின் ஷட்டரை உடைத்து திருடிய கொள்ளையர்கள் காசுகளை சிதறவிட்டு சென்றனர். குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே அருமநல்லூர் ஆற்றங்கரை பகுதியில் பிரபல இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகே ஞானபாய் என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
இந்த நிலையில் இரவில் கடையின் முன்பக்க ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கல்லா பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.4 ஆயிரம் பணத்தை திருடினர்.

மேலும் காசுகளையும் திருடர்கள் விட்டு வைக்கவில்லை. கடைக்குள் வேறு எதுவும் இருக்கிறதா? என சல்லடை போட்டு தேடியுள்ளனர். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது எதுவுமே அறியாத ஞானபாய் நேற்று காலையில் கடையை திறக்க செல்லும் போது கடையின் முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு பாதி திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் பணம் கொள்ளை போயிருப்பதையும் கண்டு கலங்கினார்.

இதுகுறித்து தகவலறிந்த பூதப்பாண்டி போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் பணத்தை திருடியதோடு, காசுகள் இருந்த மேசை டிராயரை அப்படியே கழற்றி எடுத்து சென்றுள்ளனர். அவசரத்தில் தப்பி போகும் போது வழியெங்கும் காசுகளை சிதறவிட்டே சென்றுள்ளனர். அந்த காசுகள் திருடப்பட்ட கடைக்கு சற்று தொலைவில் இருந்த தோட்டம் வரை கிடந்தது. அங்குதான் மேசை டிராயர் பகுதியும் கிடந்தது. அதனை போலீசார் மீட்டனர்.

இந்த சம்பவம் சினிமா காட்சிபோல் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சினிமா படம் ஒன்றில் நடிகர் வடிவேலு திருடுவதற்காக தனது கூட்டாளிகளுடன் செல்வார். திருடிவிட்டு செல்லும்போது போலீசில் சிக்காமலிருக்க மிளகாய் பொடியை தூவ சொல்வார். ஆனால் அவரது கூட்டாளி மிளகாய் பொடியை திருடிய வீட்டில் இருந்து நடிகர் வடிவேலு தங்கியுள்ள வீடு வரை போட்டுக்கொண்டே வருவார்.

இதனால் போலீசிடம் சிக்கிவிடுவார். ஆனால் பூதப்பாண்டியில் நடந்த திருட்டு சம்பவத்தில் உஷாரான கொள்ளையர்கள் தோட்டத்தில் வைத்து பணத்தை வேறு பைக்குள் எடுத்து தப்பி சென்று விட்டனர். பூதப்பாண்டி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்