மருத்துவ படிப்பு சேர்க்கையில் மாநிலத்தில் தர்மபுரி 2ம் இடம்

தர்மபுரி, செப்.12: 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், மருத்துவ படிப்பில் சேருவதில், மாநிலத்தில் தர்மபுரி மாவட்டம் 2ம் இடம் பெற்றுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், 1600க்கு மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. இதில், 2.30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மட்டும் 176 உள்ளன. கடந்த ஆண்டு நடந்த 10வது, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில், பல மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதனால் தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்தது. நடப்பாண்டு, அனைத்து மாணவர்களும் பொதுதேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில், அரசு பள்ளி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 57 மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். 44 மாணவர்கள் பல் மருத்துவ படிப்பு தகுதி பெற்றனர்.

7.5 சதவீத இடஒதுக்கீட்டில், மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கையில், மாநிலத்தில் 2ம் இடத்தை, தர்மபுரி மாவட்டம் பெற்றுள்ளது. அதே போல் ஐஐடி, என்ஐடி, ஜேஇஇ பொறியியல் உயர்கல்வி படிப்பில் 9பேர் சேர்ந்துள்ளனர். கால்நடை மருத்துவ படிப்பு 11 பேர், பிஎஸ்சி அக்ரி படிப்பில் 15பேர் சேர்ந்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கல்வி திட்ட செயலாக்கக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். இதில் கடந்த 2022-2023ம் ஆண்டில், 10, 11, 12ம் வகுப்பின் பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விழுக்காடு குறித்தும், நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி நுழைவுதேர்வுகளில் மாணவ, மாணவிகளின் செயல்திறன் மற்றும் நீட் தேர்வின் மூலம் எம்பிபிஎஸ் இடங்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் வாயிலாக ஒதுக்கப்பட்ட இடங்களில், தர்மபுரி மாவட்டம் மாநிலத்தில் 2ம் இடம் பெற்றது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசுகையில், ‘தர்மபுரி மாவட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வுக்கு அதிக மாணவர்களை தயார்படுத்த வேண்டும். கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தகுந்த
வழிகாட்டுதல்களை வழங்கி, சிறந்த பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் அனைவரும் 100 சதவீத இடைநிற்றல் இல்லாமல், பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளின் அடிப்படை அறிவியல் மற்றும் கணித பாடங்களில் அடிப்படை புரிதலை மேம்படுத்த வேண்டும். கற்பிக்கும் முறை மற்றும் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் முறைகளை உற்றுநோக்கி, தகுந்த அறிவுரைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்,’ என்றார்.

இக்கூட்டத்தில், பள்ளிக் கட்டிடங்களின் உறுதித் தன்மை, மேற்கூரை பராமரிப்பு, சுற்றுச்சுவர், கழிப்பிட வசதி மற்றும் பள்ளித்தூய்மை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். தமிழ்வழி சான்றிதழ் மற்றும் புதுமைப்பெண் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, குறிப்பிட்ட காலத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும். விலையில்லா பாடப் புத்தகங்கள், பாடக் குறிப்பேடுகள், சைக்கிள்கள், புத்தகப்பை, சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு அரசின் நலத்திட்டங்களின் விவரங்களை மாணவ, மாணவிகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்துவதை, தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்