மரக்காணம் அருகே விஷச்சாராய வழக்கில் வானூர் நீதிமன்றத்தில் 10 பேர் ஆஜர்

 

மரக்காணம், மே 19: மரக்காணம் அருகே விஷச்சாராய வழக்கில் கைதான 10 பேரும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் பகுதியில் உள்ள வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்த மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் (24), மண்ணாங்கட்டி (55), ஆறுமுகம் (48), ரவி (50), முத்து (35), குணசீலன் (40) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பரகத்துல்லா (48) மற்றும் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஏழுமலை (50) ஆகியோரிடம் வழக்கமாக சாராய கேன்களை வாங்குவதாகவும், இந்த சரக்குகளை தான் இப்பகுதியில் தொடர்ந்து விற்பனை செய்ததாகவும் தெரிவித்தனர். புதுவை மாநிலத்துக்கு சென்று பர்க்கத்துல்லா, ஏழுமலை ஆகியோரை கைது செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த இளையநம்பி (50), ராபர்ட் (48) ஆகியோரிடம் இருந்து மெத்தனால் கலந்த எரிசாராயத்தை மரக்காணம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளனர். ரசாயன தொழிலதிபர் இளைய நம்பி மற்றும் ராபர்ட் ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். சென்னையை சேர்ந்த ரசாயன தொழிற்சாலை அதிபர், புதுவை மாநிலத்தைச் சேர்ந்த மொத்த சாராய வியாபாரி உள்ளிட்ட 10 பேரை வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

Related posts

கோத்தகிரியில் கனமழை

படுகர் தினவிழா கோலாகலம்: பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற மக்கள்

மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்