மதுரை வைகை ஆற்றுப்பகுதியில் துப்பாக்கி, தோட்டாக்களுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது

மதுரை, மே 4: மதுரையில் சட்ட விரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள, வைகை ஆற்றுப் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வைகை ஆற்றின் தென்கரையோர சாலையில் சந்தேகத்துக்குரிய வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றவர்களை பிடித்து சோதனை செய்தபோது ஒரு துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு நடந்த விசாரணையில், அவர்கள் சென்னை மேற்கு அண்ணாநகரை சேர்ந்த தனசேகர்(52) மற்றும் மதுரை கோமதிபுரம் ஆவின்நகரை சேர்ந்த சுபாஸ்(40) என்பதும், மதுரையில் உள்ள நண்பர் ஒருவர் மூலமாக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பெற்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு துப்பாக்கி, தோட்டாக்களை கொடுத்தது யார்? துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தது ஏன்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்