மதுரை மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி: புதிய கமிஷனர் பெருமிதம்

மதுரை: மதுரை மாநகராட்சியின் கமிஷனராக நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று, விரைவில் பொறுப்பேற்கவுள்ள பிரவீன்குமார் கூறியுள்ளார்.மதுரை மாநகராட்சியின் கமிஷனராக இருந்த சிம்ரன் ஜீத்சிங் காலோன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு மாற்றாக, ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார்(35) மதுரை மாநகராட்சியின் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார். சிம்ரமன் ஜீத் சிங் பொறுப்பேற்று கடந்த ஓராண்டில் மதுரையின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். வாக்கி டாக்கியுடன் கள ஆய்வில் ஈடுபட்டதுடன், அதிகாரிகள், கவுன்சிலர்களிடம் பிரச்னையின்றி பணி பங்கீடு வழங்கினார். மாநகராட்சி கூட்டங்களை முறையாக வழி நடத்தினார். இந்நிலையில் புதிய கமிஷனரான பிரவீன் குமார், கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர்.

பி.இ எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் படித்தவர். தனியார் நிறுவனத்தில் 5 ஆண்டு மென் பொறியாளராக பணியாற்றியவர். 2017ல் ஐஏஎஸ் முடித்த இவர் 2018ல் மதுரையில் கூடுதல் கலெக்டராக பணியாற்றினார். பின் 2019- 21ல் கடலூரில் துணை கலெக்டராக இருந்துள்ளார். தற்போது ராமநாதபுரம் கூடுதல் கலெக்டராக இருந்த அவர் மதுரை கமிஷனராக பொறுப்பேற்கிறார்.இதுகுறித்து விரைவில் புதிய பொறுப்பினை ஏற்கவுள்ள பிரவீன்குமார் கூறும்போது, ‘‘மதுரை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. மதுரை மாநகராட்சியை மேம்படுத்த பல்வேறு வகையில் திட்டமிட்டு பணிகளை விரைந்து மேற்கொண்டு சிறப்பு சேர்ப்பேன்’’ என்றார்.

Related posts

அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு

துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்